ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற ஏன் இத்தனை யோசனை?
பொதுவாகவே எல்லா மனிதர்களுக்கும் ஒரு துறையைத் தேர்வு செய்துவிட்டால் இறுதிவரை அதில் தான் இருக்க வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. கடந்த 40,50 ஆண்டுகளாகவே மனிதர்கள் இந்த மனநிலையில் தான் இருந்து வருகிறார்கள். ஏன் ஒருவர் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற அதிகம் யோசிக்க வேண்டும்?
என்னைக் கேட்டால் இந்த எண்ணமே முற்றிலும் தவறானது என்பேன். எப்போது கல்வியானது நிறுவனம் சார்ந்த ஒன்றாக மாறியதோ, அன்றிலிருந்தே ஒரே துறையில் தான் பயணிக்க வேண்டும் என்ற தவறான பிம்பம் மனிதர்களின் மனதில் பதிந்துவிட்டது. கல்வி பல பகுதிகளாகப் பிரியப் பிரிய, துறைசார் பணிகள் அதிகமாக வர ஆரம்பித்தது. முன்பெல்லாம் ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், ஒரே மருத்துவர் தான் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். தற்போது கண், காது, மூக்கு, வாய், இதயம், கிட்னி, நுரையீரல், மூளை, எலும்பு, நரம்பு என தனித்தனி டாக்டர்களும் அவர்களுக்கான தனித்தனி படிப்புகளும் உருவாகியிருக்கிறது.
இன்ஜினியரிங் படித்துவிட்டால் அந்தத் துறையில் தான் இறுதிவரை இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அல்லது ஒரு சில வேலைகளை இன்ஜினியர் மட்டும் தான் செய்ய வேண்டும் என வகைப்படுத்தி வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட வேலையை இவர்கள் தான் செய்ய வேண்டும் என வகைப்படுத்துவது நல்லது தான் என்றாலும், ஒரு துறையில் வல்லுனராக இருப்பவர் மற்றொரு துறையைப்பற்றி அறிந்து கொள்ளவோ அல்லது அதில் பணிபுரியவோக் கூடாது என்று அர்த்தமில்லை.
உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள பல துறையில் வல்லுனராக இருப்பதே நல்லது. நான் இன்ஜினியரிங் படித்துவிட்டேன், அவ்வளவுதான் மேற்கொண்டு எதுவும் கற்க மாட்டேன். அது சார்ந்த ஏதோ ஒரு வேலையில் போய் சேர்ந்து, இறுதிவரை என் காலத்தை ஒட்டிக்கொள்வேன் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.
ஒருவேளை திடீரென நீங்கள் பணிபுரியும் துறையிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டால், அடுத்தது என்ன செய்வதென்ற புரியாத நிலைக்கு சென்று விடுவீர்கள். இதுவே பல துறைசார்ந்த அறிவையும் வளர்த்துக் கொண்டிருந்தால், ஒரு துறை கைவிட்டாலும் மற்றொரு துறையை பற்றிக்கொண்டு மேல் எழும்ப வாய்ப்பை அது ஏற்படுத்திக் கொடுக்கும்.
"ஒரே ஒரு துறையில் பணியாற்றுவது தவறல்ல. ஆனால் ஒரே ஒரு துறையில் மட்டுமே திறனை வளர்த்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய தவறாகும்."
முடிந்தவரை கால ஓட்டத்திற்கு ஏற்ப திறன்களை அப்டேட் செய்துகொண்டே இருங்கள். நிச்சயம் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் அறிவானது உங்களை ஒருபோதும் கைவிடாது. li