ஒற்றுமை யாத்திரை ஏன்? ராகுல் வெளியிட்ட ரகசியம்!

ஒற்றுமை யாத்திரை ஏன்? ராகுல் வெளியிட்ட ரகசியம்!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் நோக்கில், ‘ஒற்றுமை யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார்.

மொத்தம் 3,750 கி.மீ. தொலைவு கொண்ட இந்த யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியானா, பஞ்சாப் வழியாக இமாச்சலம் சென்றடைந்துள்ளது. இந்த யாத்திரை வரும் 30தேதி மகாத்மா காந்தி நினைவு நாளில் காஷ்மீரில் நிறைவடைகிறது.

அவரது இந்த யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த யாத்திரை, காஷ்மீரை நெருங்கும் நிலையில் ராகுல் காந்தி, ஒற்றுமை யாத்திரையை திட்டமிட்டு நடத்துவது ஏன்? என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

இமாச்சல் பிரதேசம் கங்ராவில் நடந்த பேரணியில் பேசிய ராகுல், “நாங்கள் நாடாளுமன்றத்தில் பேச முற்பட்டபோதெல்லாம் மைக்குகள் அணைக்கப்பட்டன. கேமராக்கள் மக்களவைத் தலைவர் பக்கமே திரும்பியிருந்தன. நாங்கள், பண மதிப்பீட்டு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. மற்றும் அக்னிவீர் திட்டம் குறித்துப் பேச முயன்றோம். ஆனால், பேசவிடாமல் தடுத்து விட்டனர். பத்திரிகைகள், ஊடகங்களும் வேலையின்மை பிரச்னையையோ அல்லது அக்னிவீர் திட்டத்தையோ அல்லது விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையோ பற்றி விவாதிக்காமல், மக்கள் பிரச்னைகளின் கவனம் செலுத்தாமல், பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், நிகழ்வுகளை வெளியிடுவதிலேயே கவனம் செலுத்தின.

மத்திய அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகங்கள் முக்கியப் பிரமுகர்களை குறிவைத்து அழுத்தம் கொடுக்கின்றன. எனவே, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை மக்களின் கவனத்துக்கு நேரிடையாகக் கொண்டு செல்லவே இந்த ஒற்றுமை யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.

முதலில் 125 பேர்களுடன் தொடங்கிய இந்த யாத்திரைக்கு இன்று லட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு தொடங்கி 25 கி.மீ. யாத்திரை நடைபெறுகிறது. இது மிக நீண்ட யாத்திரை. இதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்த யாத்திரை மூலம் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் மன வலியை நேரில் பார்த்து புரிந்துகொண்டோம்” என்று ராகுல் காந்தி கூறினார்.

இமாச்சலில் இந்த யாத்திரையை மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு தொடங்கி வைத்தார். கட்சியின் மாநிலத் தலைவர் பிரதிபா சிங் மற்றும் 40 எம்.எல்.ஏ.க்கள் இதில் பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com