ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு சாதகமாகச் செயல்பட்டதன் காரணமாகத்தான், கடந்த 2014ல் 66,000 கோடி ரூபாயாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2022ல் 11.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது’ என்று மக்கள் சொல்வதாக நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டிப் பேசினார். அதைப் போலவே, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை, பண வீக்கம், அரசு நலத்திட்ட உதவிகள் ஏழை எளியோரைப் போய்ச் சேராமை போன்ற பல குற்றச்சாட்டுகளையும் பிரதமர் மோடி மீது சுமத்திப் பேசி இருந்தார்.

இந்த நிலையில், ‘பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் காந்தி கூறியுள்ள அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் இந்த அவையில் சமர்ப்பிக்காததால் அவர் மீது ஒழுங்கு நடவடிகை எடுக்க வேண்டும்’ என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர், ‘குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பல அவதூறான, அவர் பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் இந்த சபையில் கொடுக்கவில்லை. ஆகவே, இந்த சபையை அவர் தவறாக வழிநடத்தி இருக்கிறார். சபையின் விதிகளை மீறி அவர் பேசி இருப்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவின் கோரிக்கையை ஏற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பாரா? அப்படி ராகுல் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகள் என்ன? அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com