முதல்வர் மன்னிப்பு கேட்பாரா? தொடரும் கேரளத்து கதகளி!

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இருமுனைப் போட்டி அரசியல் எப்போதும் தமிழ்நாட்டில்தான் உச்சத்தில் இருக்கும். ஆனால், சமீப காலமாக தமிழ்நாட்டை கேரளா மிஞ்சி வருகிறது. ஆளுங்கட்சியான இடதுசாரிகளை எதிர்த்து தினமும் ஒரு அறிக்கைப்போர், காங்கிரஸ் தரப்பிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ பின்வாங்கியதுதான் சமீபத்திய பரபரப்பு செய்தி. கடந்தமுறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சோலார் பேனல் ஊழல் விவகாரம் வெடித்தது. அது குறித்து சி.பி.ஐ மேற்கொண்ட விசாரணையில் உம்மன் சாண்டிக்கு எந்த தொடர்பும் இல்லையென்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சென்ற வாரம், சி.பி.ஐ தன்னுடைய விசாரணையை முடித்துவிட்டு, திருவனந்தபுரம் குற்றவியல் தலைமை மாஜிஸ்திரேட் வசம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்ததிருக்கிறது. அறிக்கை விபரங்கள் முழுமையாக வெளியாக வரவில்லை என்றாலும் உம்மன் சாண்டி ஆட்சியின் மீது சொல்லப்பட்ட பொய் குற்றச்சாட்டு என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சி அமைந்ததும், உம்மன் சாண்டி மீதான விசாரணைகளை முடுக்கிவிட்டது. உம்மன் சாண்டிக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக முக்கியக் குற்றவாளியான சரிதா நாயர் வாக்குமூலம் தந்திருந்தார். அவருடன் அன்றைய முதல்வரின் உதவியாளர்கள் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஊழல் தொடர்பாக நீதிபதி சிவராஜன் என்பவர் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிட்டியும் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி, அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்ததாகவும் அதற்காக முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்பு கேட்கவேண்டுமென்றும் கேரள காங்கிரஸ் களத்தில் இறங்கியிருக்கிறது. 'உம்மன் சாண்டியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் தீக்குளித்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆகவே, பினராயி விஜயன் மன்னிப்பு கேட்கவேண்டும்' என்கிறார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே ஆண்டனி.

முதல்வர் என்ன செய்யப்போகிறார்? இதுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான மோதல் பற்றி அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, 'இது கேரள மாநிலத்தின் பிரச்சனை. பா.ஜ.க என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே எங்களால் கருத்து கூற முடியும்' என்கிறார்கள். இதெப்படி இருக்கு?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com