மத்தியப் பிரதேசத்தில் பியூட்டி பார்லர் செல்ல விடாமல் தடுத்ததால் பெண் தற்கொலை!
34 வயதான பெண் ஒருவர் அழகு நிலையத்திற்குச் செல்வதை கணவர் தடுத்ததால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் போலீஸ் அதிகாரி ஒருவர் மூலமாக வெள்ளிக்கிழமை அன்று வெளியில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்துள்ளது. வியாழன் அன்று நகரின் ஸ்கீம் நம்பர் 51 பகுதியில் உள்ள தனது வீட்டில் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சப் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் யாதவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
சம்பவ தினத்தன்று அப்பெண்ணை அவரது கணவர் "பியூட்டி பார்லருக்குச் செல்ல விடாமல் தடுத்ததாகவும், அதை அடுத்தே இப்படி ஒரு சோகம் நிகழ்ந்ததாகவும்” விசாரணையின் போது அப்பெண்ணின் கணவர் காவல்துறையினரிடம் கூறினார், மேலும் அவர் தன்னை பியூட்டி பார்லருக்குச் செல்ல விடாமல் தடுத்த கணவர் மீதிருந்த ஆத்திரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என காவல்துறையினர் யூகித்திருக்கின்றனர். அதனடிப்படையிலும் இந்த வழக்கு விசாரணைகள் தொடரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் காவல்துறை அதிகாரி யாதவ் மேலும் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தீவிரமாகக் களமிறங்கியுள்ள மத்திய பிரதேச காவல்துறையினர், பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு இப்படி ஒரு புதுக்காரணமா என்று அதிர்ச்சியில் வாயடைத்துப் போனதாகத் தகவல்.