பா.ஜ.க.வினர் குறிவைத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆளுநர் மாளிகையிலிருந்து அதிரடியாக நீக்கம்!

பா.ஜ.க.வினர் குறிவைத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆளுநர் மாளிகையிலிருந்து அதிரடியாக நீக்கம்!

பா.ஜ.க.வினர் நீண்டநாளாக குறிவைத்திருந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தினி சக்ரவர்த்தி, ஆளுநர் மாளிகைப் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மேற்குவங்க ஆளுநராக சமீபத்தில் பொறுப்பேற்றார் சி.வி.ஆனந்தபோஸ். இவர் பதவியேற்றதிலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நல்லுறவு வைத்திருந்தார். அண்மையில் செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆனந்த போஸ், மம்தாவை புகழ்ந்து பேசினார். மேலும் மேற்குவங்க மாநில சட்டப்பேரவையில் பேசும்போதும் முதல்வரை பாராட்டிப் பேசினார்.

அவரது இந்த நடவடிக்கை பா.ஜ.க.வினருக்கு எரிச்சலூட்டியது. இதற்கு என்ன காரணம், யார் காரணம் என ஆராயத் தொடங்கினர். இதற்கிடையில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தினி சக்கரவர்த்திதான் காரணம் என தெரிந்துகொண்டனர். அவர்தான் மாநில அரசு தொடர்பான விவகாரங்களை கவனித்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டனர். மேலும் ஆளுநரை அவர்தான் தன் இஷ்டப்படி வழிநடத்துவதாகவும் சந்தேகித்தினர்.

நந்தினி சக்கரவர்த்தியை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று நினைத்த உள்ளூர் பா.ஜ.க.வினர் அவரை இடமாற்றம் செய்யக்கோரி வலியுறுத்தி வந்தனர். மேலும் மாநில பா.ஜ.க. தலைவர் சுகந்த மஜும்தாரும், ஆளுநரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த சூழலில் நெருக்குதல் அதிகரிப்பதை உணர்ந்து கொண்ட மாநில ஆளுநர் ஆனந்த் போஸ், முதல் நடவடிக்கையாக தனது விவகாரங்களை கவனித்து வரும் குழுவினரை மாற்றியமைக்க முடிவு செய்தார். இதையடுத்து முதன்மைச் செயலர் அந்தஸ்தில் இருந்த ந்ந்தினி சக்கரவர்த்தியை ஆளுநர் மாளிகை பணியிலிருந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவரை சுற்றுலாத்துறைக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

மேற்குவங்க மாநில ஆளுநராக இருந்து தற்போது துணை குடியரசுத் தலைவராக பணியாற்றும் ஜகதீப் தன்கர் போல் புதிய ஆளுநர் செயல்படவேண்டும் என பா.ஜ.க. நினைப்பதாகத் தெரிகிறது. பல்வேறு விவகாரங்களில் தன்கர், மாநில அரசுடன் மோதல் போக்கில் செயல்பட்டு வந்தார்.

ஜகதீப் தன்கர் பதவிக்காலத்தில்தான் ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆளுநர் மாளிகை பா.ஜ.க. அலுவலகத்தின் கிளைபோல் செயல்பட்டு வருவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com