கருப்பாக இருந்ததால் கர்நாடகாவில் இளம்பெண் கொலை!

கருப்பாக இருந்ததால் கர்நாடகாவில் இளம்பெண் கொலை!

கல்புர்கி: ஜேவர்கி தாலுகாவில் உள்ள கெளூர் கிராமத்தில் ஒரு நபர் தனது மனைவியின் கருப்பு நிறம் காரணமாக அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த பர்சானா பேகம் (28) யாத்கிர் மாவட்டம் ஷாஹாபூர் தாலுகாவை சேர்ந்தவர்.

ஃபர்சானாவின் உறவினர் குர்ஷித் இந்த சந்தேக மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டவை; தனது உறவினரான ஃபர்சானா குற்றம் சாட்டப்பட்ட காஜா படேலை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், தம்பதியருக்கு நான்கு மற்றும் இரண்டு வயதில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஃபர்சானாவை அவரது கணவரும், கணவர் குடும்பத்தாரும் நிறத்தைக் காரணம் காட்டி மிகவும் தரக்குறைவாக கேலி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். எப்படி என்றால் 'எவ்வளவு பவுடர் அடித்தாலும் ஒரு ஹீரோயின் போன்ற முகத்தை உன்னால் பெற முடியாது' என்று ஃபர்சானாவை அவரது கணவர் படேல் கேலி செய்வதாக குர்ஷித் குற்றம் சாட்டினார்.

இது போன்ற நிறத்துவேஷ விமர்சனங்களை ஃபர்சானா தனது பெற்றோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

அது பற்றி குர்ஷித் மேலும் கூறுகையில், படேலும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணை நிறம் காரணமாக மட்டுமல்லாமல் மேலும் வரதட்சணை கேட்டும் கூட அதிகமாக சித்திரவதை செய்ததாகவும், தங்களது ஸ்டேட்டஸுக்கு ஃபர்சானா தகுதியானவர் இல்லை என்று அவர்கள் சதா ஃபர்சானாவை குத்திக் காட்டி இடித்துப் பேசுவார்கள் என்றும் தெரிவித்தார்.

ஃபர்சானா இறந்ததும் உடனே அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. கெளூரில் உள்ள பால் வியாபாரி ஒருவர் ஃபர்சானாவின் மரணம் குறித்து குர்ஷித்துக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உடனே குர்ஷித், பர்ஸானாவின் பெற்றோருடன் கெளூருக்கு விரைந்திருக்கிறார். அங்கு ஃபர்சானாவின் சடலத்தின் அருகே அப்போது அவரது இரண்டு குழந்தைகளை மட்டுமே காண முடிந்ததாகவும், குழந்தைகளின் அப்பாவும் அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து மாயமாகி விட்டதாகவும் குர்ஷித் தெரிவித்தார்..

இதையடுத்து கோபத்தில் கொந்தளித்துப் போன ஃபர்சானாவின் குடும்பத்தினர் காஜா படேல் மீது ஜேவர்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர்.

கல்புர்கி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகள் ஷஹாபூரில் நடைபெற்றன.

ஃபர்ஸானாவின் பெற்றோர் அவரது இரண்டு குழந்தைகளையும் தங்களுடன் ஷஹாபூருக்கு அழைத்துச் சென்றதாக குர்ஷித் கூறினார்.

வரதட்சணை கொடுமையால் மரணம் என்ற பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும் கல்புர்கி கிராமப்புற டி.எஸ்.பி உமேஷ் சிக்மத் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஜனவாடி மகிளா சங்கதனே (ஜேஎம்எஸ்) மாநில பிரிவு துணைத் தலைவர் நீலா கே, ஃபர்சானாவின் மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய ஜேஎம்எஸ் ஒரு குழுவை கெளூருக்கு அனுப்பும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

"இறந்தவர் தற்கொலை செய்துகொண்டாலும், சித்திரவதை குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அந்த மரணம் கொலையாகவே கருதப்படும்," என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து மகளிர் உரிமை ஆணையம் தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com