வொர்க் ப்ரம் ஹோம் - இனியும் தொடருமா? ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அதிகரிக்கும் கவலை!

வொர்க் ப்ரம் ஹோம் - இனியும் தொடருமா? ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அதிகரிக்கும் கவலை!

கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் இருந்த நிலையை நோக்கி விரைவாக திரும்பிக் கொண்டிருக்கிறோம். 90 சதவீத இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் இன்னும் தயக்கம் கொண்டிருப்பது ஐ.டி நிறுவனங்களும், ஊழியர்களும்தான்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றியதால் ஐ.டி. துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொற்றுக் காலத்தில் ஐ.டி துறையும் விவசாயத்துறையும் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தன. ஐ.டி துறை பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் சந்தித்தது.

கொரோனா தொற்று காலம் போல் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை தொடர்வதா அல்லது அனைத்து ஊழியர்களையும் நிறுவனத்திற்கு வரவழைத்து அங்கிருந்து பணியாற்றச் செய்வதா என்பதுதான் இன்றைய நிலையில் ஐ.டி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கேள்வி.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, கொரோனா தொற்றுக் காலத்திற்கு பின்னர் 9 சதவீத ஊழியர்கள் மட்டுமே தினமும் அலுவலகத்திற்கு வர விரும்புகிறார்கள். 32 சதவீதம் பேர், வீட்டிலிருந்து பணியாற்றவே விரும்புகிறார்கள். வீட்டில் சில நாட்களும், அலுவலகத்திற்கு வந்து சில நாட்களும் பணியாற்றுவதற்கு 59 சதவீத ஊழியர்கள் விரும்புகிறார்கள்.

பெரும்பாலான ஊழியர்கள் ஹைபிரிட் மாடல் என்னும் இருவிதமான நடைமுறைகளும் ஊழியர்களுக்கு தரப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், எத்தனை நாள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற தயார் என்பதையோ, எத்தனை நாள் வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புகிறார்கள் என்பதிலோ ஒரு தெளிவு இல்லை.

அலுவலகத்திற்கு வர விரும்பும் ஊழியர்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்திற்கு வந்து செல்ல விரும்புகிறார்கள். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்து பணியாற்றவே விரும்புகிறார்கள். வார இறுதியை நீட்டிப்பதற்காக விரும்புகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவரும் நேரத்தில் ஐ.டி துறை ஊழியர்கள் தினமும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று நிறுவனங்கள் உத்திரவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. தன்னுடைய ஊழியர்கள் தினமும் வருவதால் ஐ.டி. நிறுவனங்களுக்கும் கூடுதல் செலவுகள் ஆகும் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை கண்காணிப்பதும் நாளுக்கு நாள் சவாலாக மாறி வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில், 87 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்றும்போது உற்சாகமாக பணியாற்ற முடிவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

டபுள் பாசிடிவ்வாக ஊழியர்கள் சொல்லக்கூடும். சம்பந்தப்பட்ட ஊழியர்களின் மேனேஜர் கருத்தையும் கவனிக்க வேண்டும். 12 சதவீத நிர்வாகிகள் மட்டுமே வீட்டிலிருந்து பணியாற்றும் தங்களது ஊழியர்களை திறம்பட கண்காணிக்க முடிகிறது என்கிறார்கள். இது ஆய்வின் முடிவுகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

எங்கிருந்து வேண்டுமானாலும் பணி செய்யட்டும். ஆனால், உருப்படியாக பணியாற்றினால் போதும் என்கிற மனநிலைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் வந்துவிட்டார்கள். யாருகிட்ட?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com