

ஜம்மு காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை ராணுவ வீரர்கள் மீட்டு முழங்கால் அளவு உறை பனியில் 3 கிலோ மீட்டர் சுமந்து சென்ற ராணுவ வீரர்களின் செயல், நாட்டின் எல்லையை காப்பதுடன் உயிர் காக்கும் பணியிலும் அவர்களின் எல்லைகளைத் தாண்டிய மனித நேயம் அனைவரின் உள்ளத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை இந்திய ராணுவ வீரர்கள் காப்பாற்றிய செயல் சமூக வலைதளங்களில் பெரிதாக பாராட்டை பெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன் காரணமாக வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் சுமார் 3அடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ளது. இதனால் சாலைப்போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் தங்தார். இப்பகுதியில் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் முழுவதும் மூடப்பட்டு போக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்தது.
அப்பகுதியில் வசித்து வரும் 26 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அவசர உதவிக்காக அவருடைய கணவர் அருகில் இருந்த வில்காம் ராணுவ முகாமை உடனடியாக தொடர்பு கொண்டார். தகவல் அறிந்ததும் ராணுவ வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஸ்டிரெச்சரில் வைத்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றனர். முழங்கால் அளவு இருந்த பனியில் ராணுவ வீரர்கள் அப்பெண்ணை தங்களின் தோள்களில் சுமந்து சென்றனர்.
ஆம்புலன்ஸ் வாகனம் வரக்கூடிய பிரதான சாலைக்கு தோள்களில் தூக்கி வைத்த ராணுவ வீரர்கள் அவளை பத்திரமாக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்பொழுது தாயும் சேயும் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ வீரர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.