மனைவியை பிரசவ அறைக்கு அனுப்பிவிட்டு துருக்கி மீட்புப் பணிக்குச் சென்ற இந்திய ராணுவ வீரர்!

மனைவியை பிரசவ அறைக்கு அனுப்பிவிட்டு துருக்கி மீட்புப் பணிக்குச் சென்ற இந்திய ராணுவ வீரர்!

டந்த பத்து நாட்களுக்கும் மேலாக உலக மக்கள் அனைவராலும் மிகவும் சோகமாகப் பேசப்படும் விஷயம் துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் ஆகும். இந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் நிலைகுலையச் செய்துள்ளது. உலக நாடுகள் பலவும் தங்களால் இயன்ற உதவியை அந்த இரு நாடுகளுக்கு செய்து வருகின்றன. இந்தியாவும் தம் பங்குக்கு பல்வேறு உதவி பொருட்களை வழங்கியதோடு, 99 பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அவர்களும் இடிபாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹபூரைச் சேர்ந்த ஹவில்தார் ராகுல் சவுத்ரி இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் தனது குழந்தையை இந்த உலகுக்கு வரவேற்க ராகுல் சவுத்ரி தயாராகிக் கொண்டிருந்தார். இந்த வேளையில்தான் இந்திய ராணுவம் அவரை துருக்கி மீட்புப் பணிக்கு அனுப்புவதாக முடிவு செய்து அவருக்கு அதை அறிவித்தது. ஆனால், ராகுல் சவுத்ரி தன்னுடைய மேல் அதிகாரியிடம் தனது மனைவிக்கு 8ம் தேதி பிரசவத்துக்காக சிசேரியன் அறுவை சிகிச்சை நடைபெறப் போவதாகவும் அதனால் தான் அவருடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்ட அந்த மேல் அதிகாரி, அவரது மனைவியிடம் துருக்கி நிலநடுக்கம் குறித்தும் அதன் மீட்டுப் பணிக்குச் செல்ல தாம் செல்ல இருப்பதையும் குறித்தும் அவரிடம் பேசச் சொன்னார். அதைக் கேட்ட ராகுல் சவுத்ரியின் மனைவி, ‘முதலில் நாட்டுக்குச் சேவை செய்யுங்கள்’ எனக் கூறி அவரை துருக்கி மீட்புப் பணிக்கு நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தார். ராகுல் சவுத்ரி துருக்கி செல்ல விமானம் ஏறிய அதேநேரம் அவரது மனைவி பிரசவத்துக்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டார்.

துருக்கியில் ராகுல் சவுத்ரி இறங்கியதும், அவருக்கு மகன் பிறந்திருக்கும் செய்தி கிடைத்துள்ளது. ராணுவ மருத்துவமனையிலுள்ள அவரது சக வீரர்களும் நண்பர்களும் குழந்தைக்கு, ‘துர்கி சவுத்ரி’ எனப் பெயரிடும்படி கூறினார்களாம். இக்கட்டான சூழ்நிலையிலும் தனது கணவரை தன்னம்பிக்கையூட்டி மீட்புப் பணிக்கு அனுப்பி வைத்த அந்த மனைவி குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெகுவாகக் பரவி வருகிறது. ராகுல் சவுத்ரியையும் அவரது மனைவியைம் பலரும் தங்கள் பதிவின் மூலம் பாராட்டி வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com