சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் சமர்ப்பித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாள் நவம்பர் 26, 1947. அதற்குப் பின் வருடாந்திர பட்ஜெட் பிப்ரவரி மாதக் கடைசி நாளில் மாலை ஐந்து மணிக்கு தாக்கல் செய்வது வழக்கமாக மாறியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாலை ஐந்து மணிக்கு தாக்கல் செய்யப்பட்டதால் அதையே பின்பற்ற ஆரம்பித்தோம். இந்தியாவில் மாலை ஐந்து மணி என்றால், பிரிட்டனில் காலை 11.30 மணி. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் கீழ் இருந்த இந்தியாவின் பட்ஜெட் உடனுக்குடன் தெரிவிப்பதற்காக இந்த நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2001ஆம் வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம் காலை 11 மணிக்கு மாற்றப்பட்டது. 2017 ஆம் வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு மாறியது. 2017ஆம் வருடத்திற்கு முன்னால் ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் 2017ஆம் வருடம் ரெயில்வே பட்ஜெட் நிதிநிலை பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது..
தாராள மயமாக்குதலுக்கு முன்னால் பட்ஜெட் என்றாலே வரி உயர்த்துதல் என்று இருந்தது. விற்பனை வரி, சுங்க வரி, தனிநபர் மற்றும் கம்பெனிகளின் வருமான வரி என்று எல்லாமே உயரும். பட்ஜெட்டுக்கு அடுத்த நிதியாண்டில் எல்லாப் பொருட்களின் விலையும் உயருவதுடன், தனிநபர் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியும் கணிசமாக அதிகரிக்கும். தாராள மயமாக்கலினால் இந்த நிலைமை மாறியது.
முன்பெல்லாம் பட்ஜெட் உரையைக் கேட்கும் போது, யாராவது நிதியமைச்சருக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் புலவர் பிசிராந்தையார் எழுதிய “காய் நெல்லறித்துக் கவளம் கொளினே” என்ற புறநானூற்றுப் பாடலை சொல்லக் கூடாதா என்று தோன்றும். ஒருமுறை பட்ஜெட் உரையாற்றலில் அமைச்சர் சீதாராமன் அவர்கள் இந்தப் பாடலையும் அதன் கருத்தையும் விளக்கினார்.
“மக்களின் நிலையறிந்து வரி விதிக்க வேண்டும்” என்ற கருத்தாழம் கொண்ட இந்தப் பாடல் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு அரசும் நினைவில் கொள்ள வேண்டிய பாடல்.