இந்தியா பொருளாதாரம்
இந்தியா பொருளாதாரம்

2075-ல் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும்?

கோல்ட்மேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கி நிறுவனம், 2075இல் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் எனக் கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தற்போது இந்தியா உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது. இது ஜெர்மனி அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளைப் பின்னுக்கு தள்ளி இனி வரும் காலங்களில் முன்னேறும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், மக்கள் தொகை, முதலீடு, தொழிலாளர் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அவர்களின் கூற்றுப்படி, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பிறரைச் சார்ந்து வாழும் சார்பு விகிதம் (Dependency Rate) மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்துப் பேசிய கோல்ட்மேன் சாக்ஸ் குழுவில் இருக்கும் இந்தியப் பொருளாதார நிபுணர் சாந்தனு, "இந்தியாவில் அதிகரித்து வரும் முதலீடுகள், தொழிலாளர் உற்பத்தித் திறன் போன்றவற்றால் இந்தியா வளர்ச்சிப்பாதையில் தொடர்ந்து செல்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கு மக்கள் தொகையும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இதனால், தற்போது உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தில் இருக்கும் இந்தியா மேலும் முன்னேறப்போகிறது. ஒரு நாட்டின் சார்பு விகிதம் குறைந்தால் அவர்களின் சேமிப்பு விகிதம் அதிகரிக்கும். இதனால் வருவாய் அதிகரித்து முதலீடுகளும் அதிகரிக்கும்" என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இந்திய அரசாங்கமும் பல உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக ரயில்வே மேம்பாடு, சாலை வசதி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் இந்தியாவில் இருக்கும் தனியார் நிறுவனங்கள், சேவை மற்றும் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இதுவே நல்ல தருணம் என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படாமல் போவதற்கு, தகுதியுடைய தொழிலாளர் பங்களிப்பு வளர்ச்சி பெறாமல் இருந்தால் மட்டுமே நிகழும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாகவே தகுதியான தொழிலாளர் களின் பங்களிப்பின்மை விகிதம் குறைந்திருக்கிறது. மேலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதால், அதில் இந்தியா சற்று கவனம் செலுத்துவது அவசியம் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் அளித்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com