இந்திய முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழிவந்தவர்கள் அல்ல: தேவேந்திர பட்னவிஸ்

இந்திய முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழிவந்தவர்கள் அல்ல: தேவேந்திர பட்னவிஸ்
Published on

ந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் அவுரங்கசீப்பின் வழிவந்தவர்கள் அல்ல. தேசிய உணர்வு உள்ள எந்த ஒரு முஸ்லிமும் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பை தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.

அவுரங்காபாதில் உள்ள அவுரங்கசீப் சமாதிக்குச் சென்றுவந்த பிரகாஷ் அம்பேத்கரின் செயலை சிவசேனையின் உத்தவ் தாக்கரே பிரிவு ஆதரிக்கிறதா என்றும் பட்னவிஸ் கேள்வி எழுப்பினார். (மகாராஷ்டிரத்தில் பிரகாஷ் அம்பேத்கரின் வான்சித் பகுஜன் அகாதி, உத்தவ் தாக்கரே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.)

சமீபத்தில் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் அவுரங்கசீப்பின் படத்தை சமூக வலைத்தளங்களில் முன்னிலைப் படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து  அங்கு ஆர்ப்பாட்டங்களும் மோதலும் நடைபெற்றன. இந்த நிலையில்தான் பிரகாஷ் அம்பேத்கர், அவுரங்கசீப் சமாதிக்குச் சென்றுவந்துள்ளார்.

அகோலா, சாம்பாஜிநகர் மற்றும் கோல்ஹாபூர் சம்பவங்கள் எதேச்சையாக நடந்தவை அல்ல. இது திட்டமிட்ட செயல். ஒருநேரத்தில் அவுரங்கசீப் படத்தை எப்படி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்று பட்னவிஸ், அகோலாவில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எவரும் அவுரங்கசீப்பை ஆதரிக்கவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை. அவுரங்கசீப்பும் அவரது முன்னோர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள். இந்தியாவில் தேசிய உணர்வு உள்ள எந்த முஸ்லிமும் அவுரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். அவர்கள் சத்ரபதி சிவாஜியைத்தான் தலைவராக அங்கீகரித்துள்ளனர், ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அவுரங்கசீப் இந்தியாவை நீண்டகாலம் ஆண்ட பேரரசர். ஹிட்லரும் ஜெர்மனியை ஆட்சி செய்தார். ஹிட்லரை பலர் கடவுளாக வழிபடுவதில்லையா? அதேபோல்தான் அவுரங்கசீப்பும் என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தை உத்தவ் ஆதரிக்கிறாரா என்று பட்னவிஸ் கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிரத்தில் அமைதியை சீர்குலைக்கும் செயலில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்னவிஸ் எச்சரித்தார்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்ப்பதைவிட கட்சியை கலைத்துவிடலாம் என்று மறைந்த பாலாசஹேப் தாக்கரே ஒருமுறை கூறியிருந்ததாக பட்னவிஸ் சுட்டிக்காட்டினார். ஆனால், உத்தவ் தாக்கரே கட்சியின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக பட்னவிஸ் குற்றஞ்சாட்டினார்.

பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 23 ஆம் தேதி பிகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமே தவிர அதனால் ஒரு பலனும் ஏற்படாது. பா.ஜ.க. என்னும் ஆலமரத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் பட்னவிஸ் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com