‘இந்திய முஸ்லிம்கள் முதலில் ஹிந்துக்கள்’ குலாம்நபி ஆசாத் அதிரடி!

‘இந்திய முஸ்லிம்கள் முதலில் ஹிந்துக்கள்’ குலாம்நபி ஆசாத் அதிரடி!

‘இந்திய முஸ்லிம்கள் முதலில் ஹிந்துக்கள். இஸ்லாத்தை விட ஹிந்து மதம் பழைமையானது’ என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் அமைந்த அவரது கருத்துக்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளிவந்துள்ளது. ‘இந்த தேசத்தில் உள்ள அனைத்து தனிநபர்களும் தொடக்கத்தில் ஹிந்து மதத்துடன் தொடர்புடையவர்கள்தான்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தோடா மாவட்டம், தாத்ரி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய குலாம்நபி ஆசாத், “சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இஸ்லாம் மதம் தோன்றியது. ஆனால், ஹிந்து மதம் பழைமையான வேர்களைக் கொண்டது. சில முஸ்லிம்கள் வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வந்து மொகலாய ராணுவத்தில் பங்கேற்றிருக்கலாம். இதன் விளைவாக இந்திய துணைக்கண்டத்தில் ஹிந்து மதத்திலிருந்து சிலர் இஸ்லாத்துக்கு மதம் மாறியிருக்கலாம்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “காஷ்மீரில் 6ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு காஷ்மீரி பண்டிட்டுகளே பெருமளவில் இருந்தனர். இது இஸ்லாமிய மத மாற்றத்துக்கு முன்பு இருந்த நிலையாகும். இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், ஹிந்து மதம்தான் பாரம்பரியமானது என்ற முடிவுக்கு என்னை இட்டுச் செல்கிறது. ஹிந்து, முஸ்லிம், ராஜபுதனம், பிராமணர்கள், தலித், காஷ்மீரி அல்லது குஜ்ஜார் என நாம் அடையாளம் காணப்பட்டாலும், பொதுவான தோற்றம் இந்த மண்ணுடன் நம்மை இணைக்கிறது. நமது மூதாதையர் தொடர்பு இங்கு ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த மண்ணில்தான் நமது வாழ்க்கை இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹிந்து மதம் பழைமையானது. மொகலாய ராணுவம் வெறும் 10 முதல் 20 முஸ்லிம்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. அதில் பெரும்பாலானவர்கள் மதம் மாறியவர்கள்தான். நான் பல பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால், அவை உங்களைச் சென்றடைந்திருக்காது. பாஜக தலைவர் ஒருவர் வெளிநாட்டவர் வருகை குறித்து குறிப்பிட்டார். வெளிநாட்டவரா அல்லது உள்நாட்டவரா என்பது பிரச்னையில்லை. இஸ்லாம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறது. இந்தியாவில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் இங்கு வந்துவிட்டது என்று நான் விளக்கினேன்’ என்றார் ஆஸாத்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம்நபி ஆஸாத், கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி ஜனநாயக ஆசாத் கட்சியைத் தொடங்கினார். ஏறக்குறைய 50 ஆண்டு காலத்தை காங்கிரஸ் கட்சியில் கழித்த, 73 வயதான குலாம்நபி ஆஸாத், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்து அரசியலில் முக்கியப் பணியாற்றியவர். ஜம்மு காஷ்மீர் முதல்வராகவும் அவர் பணியாற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ததிலிருந்தே ஆஸாத், காங்கிரஸ் கட்சியை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது. காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்று வெளிப்படையாகவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com