தமிழக மீனவர்கள் இன்று கோடியக்கரை மற்றும் ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து பணியிலிருந்த இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காரைக்காலில் இருந்து சென்ற மீன் பிடி படகின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதனால் அப்படகிலிருந்த மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் (32) படுகாயம் அடைந்தார்.
இதனையறிந்த இந்திய கடற்படையினர், உடனடியாக உச்சப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு தகவல் அளிக்க, கடற்படை தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அந்த மீனவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், “இன்று காலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பலில் இந்த கடற்படை வீரரகள் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டபோது, தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் மீனவர் படகு மீது பட்டுவிட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து அந்த கடற்படை வீரர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.