இந்திய கடற்படையின் புதிய பலம்: ஐஎன்எஸ் அஞ்சதீப் பிப்ரவரி 27-ல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு..!

INS ANJADIP
INS ANJADIP
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் திறன்கொண்ட ஐஎன்எஸ் அஞ்சதீப் போர்க்கப்பல், இந்திய கடற்படையால் பிப்ரவரி 27, 2026 அன்று சென்னையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இக்கப்பலை கடற்படையின் கிழக்கு கமாண்டில் இணைக்க உள்ளார். இதன்மூலம் இந்திய கடற்படை அதன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்த உள்ளது.

ஐஎன்எஸ் அஞ்சதீப், எட்டு கப்பல்களைக் கொண்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் திட்டத்தின் மூன்றாவது கப்பலாகும். இத்திட்டம் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் வெற்றியையும், நாட்டின் பாதுகாப்பில் தன்னிறைவை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட அஞ்சதீப், நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத கடலோர மற்றும் ஆழமற்ற கடற்சூழலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன கப்பலாகும்.

ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளிலும் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிதல், கண்காணித்தல், அழித்தல் ஆகிய பணிகளை இது இலக்காக கொண்டுள்ளது. உள்நாட்டு அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுதங்கள் மற்றும் உணர் கருவிகள் இதில் உள்ளன. மேலும் இலகுரக ஏவுகணைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. ரோந்து, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனும் இக்கப்பலுக்கு உள்ளது. 77 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் அதிவேக நீர்-ஜெட் உந்துவிசை அமைப்பைக் கொண்டுள்ளது, இது 25 நாட்ஸ் கடல்மைல் வேகத்தை எளிதில் அடைய உதவுகிறது.

கார்வார் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீவின் பெயரிடப்பட்ட போர்க்கப்பல் அஞ்சதீப், கடற்படையில் சேர்க்கப்படுவது, இந்தியாவின் கடல்சார் நலன்கள், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளை பாதுகாக்கும் கடற்படையின் திறன் போன்றவற்றை வலுப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
'உம்'முனு இருக்காதீங்கப்பா... சிரிச்சா, வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்னு ஆராய்ச்சிகள் சொல்லுதப்பா!
INS ANJADIP
logo
Kalki Online
kalkionline.com