

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக மனித வடிவ ரோபோ (Humanoid Robot) விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ரோபோ; முக அங்கீகாரம், கூட்ட மேலாண்மை மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகளின் பணிச் சுமையைக் குறைக்கிறது.
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், கோட்ட ரயில்வே மேலாளர் லலித் போஹ்ரா மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் போஹ்ரா ஆகியோர் 'ஏ.எஸ்.சி அர்ஜுன்' (ASC ARJUN) என்று பெயரிடப்பட்ட இந்த மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தினர். இந்திய ரயில்வேயில் இத்தகைய ரோபோ அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இது பகுதி-தன்னாட்சி (Semi-autonomous) முறையில் இயங்கி, பாதையில் உள்ள தடைகளைத் தவிர்த்து நடைமேடைகளில் ரோந்து செல்வதோடு, நிகழ்நேரத் தகவல்களையும் (Real-time data) வழங்குகிறது.
RPFன் நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும் இந்த மனித உருவ ரோபோ, பல்வேறு ரயில்வே செயல்பாடுகளுக்கு குறிப்பாக பாதுகாப்பு, பயணிகள் உதவி, கூட்ட மேலாண்மை, தூய்மை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய துறைகளில் துணைபுரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மனித வடிவ ரோபோ விசாகப்பட்டினம் ரயில்வே பாதுகாப்புப் படை குழுவினரால் முழுமையாக விசாகப்பட்டினத்திலேயே வடிவமைக்கப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. மேலும், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பொது அறிவிப்புகளை வெளியிடும் திறன் கொண்டது. ஒருங்கிணைந்த டேஷ்போர்டு மூலம் நிகழ்நேரச் சூழ்நிலைகளைக் கண்காணிக்கும் இந்த ரோபோ, முப்பரிமாணக் (3D) கண்காணிப்பு மற்றும் தீ/புகை கண்டறிதல் போன்ற முக்கிய பாதுகாப்புப் பணிகளையும் செய்கிறது. இனிவரும் காலங்களில் RPF போலீசாருடன் இணைந்து நடைமேடைகளில் ரோந்துப் பணிகளிலும் 'ஏ.எஸ்.சி அர்ஜுன்' ஈடுபடுத்தப்பட உள்ளது.
"ரயில்வே பாதுகாப்பை வலுப்படுத்தவும், பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தவும், ஊழியர்களுக்குப் பக்கபலமாக இருக்கவும் அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் வால்டேர் (Waltair) பிரிவு எடுத்துள்ள முன்னோடி நடவடிக்கை இது" என்று லலித் போஹ்ரா பெருமிதத்துடன் தெரிவித்தார்.