

பயணிகள் ரெயில்களை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் குப்பை போடுபவர்களுக்கு அபராதம் போடுவது போன்ற புதிய விதிகளை ரெயில்வே நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன்பு குப்பை போட்டால் 500 ரூபாய் அபராதம் இருந்த நிலையில் தற்போது அதை 1000 ரூபாயாக உயர்த்தி இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பொது போக்குவரத்து சேவைகளில் இந்தியன் ரெயில்வே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ரெயில்களில் கல்வி, வேலை, சொந்த வேலை காரணமாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட தூர பயணத்தின்போது அலுப்பு, சோர்வு, உடல்வலி இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு ரெயில்கள் தான் சரியான தேர்வு. அதே போல முதியவர்களை அழைத்துபோவதற்கும் குழந்தைகளை விளையாட்டு காட்டி அழைத்துபோவதற்கும் ரெயில்கள் கொடுக்கும் செளகர்யத்தை வேறு எதுவும் தராது. இந்திய ரெயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் தோராயமாக நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரெயில்கள், வந்தே பாரத் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் என இதில் ஏராளம். நீண்டதூரப் பயணங்களுக்குச் செல்லும் போது விமானங்களுடன் ஒப்பிடுகையில், ரெயில்களின் பங்களிப்பு இன்றியமையாதது. குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு களைப்பின்றி, வசதியாக செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர்.
ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் செலவை குறைப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வேளையில், ரெயில்கள், ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் யாரும் அதனை பொருள்படுத்துவதே கிடையாது.
ரெயில்களிலேயே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும்கூட, தின்பண்டங்களின் கவர்கள், தண்ணீர் புட்டிகளைப் பயன்படுத்திவிட்டு அப்படியே இருக்கைகளுக்கு அடியில் போடுவது, ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிவது போன்ற ‘சிவிக் சென்ஸ்’ இல்லாத செயல்களில் ஈடுபடுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அம்ரூத் பாரத் உள்ளிட்ட திட்டங்களில் ரயில் நிலையங்கள் நவீனத் தரத்தில் மேம்படுத்தப்படும் சூழலில் இதுபோன்ற முகம் சுழிக்க வைக்கும் செயல்கள் பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்குகின்றனர்.
இந்நிலையில் தான் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையத்தில் குப்பை போட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் (அபராத எச்சரிக்கை) என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு அதாவது 2012-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் 500 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த அபராத தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெயில் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் பயணிகள் மற்றும் பிறர் தூய்மை விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய ரெயில்வே (ரெயில்வே வளாகங்களில் தூய்மையைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கான தண்டனைகள்) விதிகள், 2012-ஐத் திருத்தி, ரெயில்வே அமைச்சகம் ஆகஸ்ட் 24 அன்று ஒரு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது அந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுபவர்கள் சம்பந்தப்பட்ட நபர் அதிகார வரம்பு கொண்ட தகுதியான நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அவர்களுக்கு 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் விதிகள் தெரிவிக்கின்றன.
அரசிதழில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, பயணிகள் மற்றும் ரெயில் வளாகத்தில் உள்ள மற்றவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, ரெயில் நிலையங்களிலோ, ரெயில் வளாகத்தின் வேறு இடங்களிலோ அல்லது ரெயில் பெட்டிகளுக்கு உள்ளேயோ குப்பைகளை வீசவோ அல்லது விட்டுச் செல்லவோ கூடாது.
அதுமட்டுமின்றி ரெயில்வே வளாகத்தில் சமைத்தல், பாத்திரம் கழுவுதல், குளித்தல், துணிகள் துவைத்தல், விலங்குகள் அல்லது பறவைகளுக்கு உணவளித்தல், எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற பிற நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் கடுமையாக விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி, ரெயில் பெட்டிகளிலும் ரெயில்வே சொத்துக்களிலும் சுவரொட்டிகளை ஒட்டவோ, முழக்கங்கள் அல்லது செய்திகளை எழுதவோ, ஓவியங்கள் வரையவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரெயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது அவற்றைச் சிதைக்கும் எந்தவொரு செயலும், தூய்மை விதிகளின் கீழ் நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.