இந்திய ரயில்வே - அதிகரிக்கும் பயணிகள், 73 சதவீதம் அதிகமாக கிடைத்த வருவாய் - எத்தனை கோடிகள் தெரியுமா!

இந்திய ரயில்வே - அதிகரிக்கும் பயணிகள், 73 சதவீதம் அதிகமாக கிடைத்த வருவாய் - எத்தனை கோடிகள் தெரியுமா!
Published on

சுற்றுலாத்துறைக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பயணிகள் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த நிதியாண்டில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்திய ரயில்வே மூலமாக பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை போல் நடப்பாண்டிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதுவரையிலான கணக்கீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது, நடப்பு நிதியாண்டில் 73 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானது. சரியான இடத்தை சரியான நேரத்தில் சென்றடைய முடிகிறது. கூடவே மற்ற பயண வழிமுறைகளை விட ரயில் பயணத்திற்கான செலவுகளும் குறைவு. ஆகவே, வெளியூர் செல்லும் பயணிகளின் முதல் தேர்வு, ரயில் பயணமாகவே இருக்கிறது.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இதுவொரு முக்கியமான சாதனை. கடந்த நிதியாண்டில் பயணியர்கள் மூலம் இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் 31 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போதைய நிதியாண்டில் இதுவரை 54 ஆயிரத்து 733 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இனி வரும் ஆண்டுகளில் இது தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதிவேக ரயில்வே சேவையை வழங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய நிறைய பயணிகள் ஆர்வமுடன் முன்வருகிறார்கள்.

பெரிய நகரங்களைச் சார்ந்துள்ள மக்கள், பணி நிமித்தமாக ஊரிலிருந்து நகரங்களுக்கு வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போல் வந்தே மெட்ரோவையும் கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

முன்பதிவு வசதி இல்லாத கட்டண வருவாயும் 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 361 சதவீதம் அதிகம் என்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பதிவு வசதி இல்லாமல் பயணம் செய்வது தடுக்கப்பட்டிருந்தது.

கொரானா மூன்றாவது அலைக்குப் பின்னரே படிப்படியாக முன்பதிவு வசதி இல்லாத பெட்டிகள் திரும்பவும் கொண்டு வரப்பட்டன. அதற்கு முன்னர் தடுப்பூசி சான்றிதழ், கிளம்புமிடம், சேருமிடம் என அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தால் மட்டுமே பயணச் சீட்டு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுகளில் நிலைமை சரி செய்யப்பட்டு, இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com