

ஈரான் -அமெரிக்க போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் கடுமையான சேதாரங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமே இதிலிருந்து சிறிது காலம் தாக்கு பிடித்து வந்த நிலையில் , தற்போது இந்தியாவும் இந்த சூழலில் சிக்க ஆரம்பித்துள்ளது. வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் போர் பதற்றங்கள், உலகம் முழுக்க கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி உள்ளன.
இந்த கடுமையான விலை உயர்வு காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் அந்நிய செலாவணி விரைவிலேயே தீரத் தொடங்கியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியதால் டாலரின் மதிப்பு சர்வதேச நாடுகளில் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. அதே நேரம் உள்நாட்டு பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. இதனால் , ஏற்படும் அதிகப்படியான இழப்பு பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.
உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் , தொடர்ச்சியாக வலிமையாகி கொண்டிருக்கும் டாலரின் மதிப்புகள் ஆகியவை இந்திய ரூபாயை சரிவிற்கு கொண்டு வந்துள்ளன. இதனால், இன்று இந்திய ரூபாய் வரலாறை காணாத அளவில் 96.14 என்ற அளவில் சரிந்துள்ளது. தொடர்ச்சியாக வளர்ந்து வரும் சந்தைகளில் அபாயங்களை கண்காணிக்காமல் , டாலர்களில் அதிக அளவில் கவனத்தை முதலீட்டாளர்கள் செலுத்தி வருகின்றனர்.
இந்த காரணிகள் ஆசிய நாடுகளில் உள்ள பணத்தின் மதிப்பை வேகமாக குறைத்து வருகின்றன. ஆசியாவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, சர்வதேச அளவில் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் இறக்குமதிக்கு பெரும்பாலும் டாலர் பயன்படுத்தப்படுவதால் , அந்நிய செலாவணி விரைவிலேயே கரைந்து ரூபாயின் மதிப்பைக் கெடுத்து விடுகிறது.
இந்தியா பல துறைகளில் அதிகளவு இறக்குமதி பொருட்களைச் சார்ந்துள்ளது. இது கச்சா எண்ணெய் மட்டுமல்லாது உணவுப் பொருளான சமையல் எண்ணெய்க்கு கூட, இந்திய சந்தைகள் பெரும்பாலும் அந்நிய நாடுகளையே பெரிதும் நம்பியுள்ளன. பல விதமான உணவுப் பொருட்கள் , மருந்துகளின் மூலப் பொருட்கள் , எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஆகியவற்றிற்கு பெரும் இறக்குமதி சந்தையாக இந்தியா உள்ளது.
ரூபாயின் மதிப்பு சரிந்தது, ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு நல்ல லாபத்தையும் கொடுக்கும் என்றாலும் , இறக்குமதி சார்ந்த துறைகளுக்கு கடுமையான நஷ்டத்தினை ஏற்படுத்தும். இந்த நஷ்டங்கள் அனைத்தும் கடுமையான விலையேற்றத்திற்கு வழி செய்யும். எரிபொருள் விலை கூடுவது மட்டுமல்லாது , சந்தையில் உள்ள மற்ற பொருட்களின் விலையும் கூடுவதால் , பொதுமக்களின் வாங்கும் திறன் குறைவதோடு பொருட்களின் தேக்கம் மூலம் பலவித நஷ்டங்களும் ஏற்படும்.
பொருளாதார சூழல்கள் நாட்டின் பங்குச் சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். ரூபாயின் சரிவு இதனுடன் முடியுமா? அல்லது சிறிது காலம் தொடருமா என்பது சர்வதேச காரணிகள் முடிவு செய்தாலும் , அதில் உள்நாட்டு மக்கள் அதிகளவில் பாதிப்படைவார்கள்.