இஸ்ரேல் லெபனான் இடையே மோதல் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்ட இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் பல காலங்களாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினை முழுவதுமாக ஒழிக்கும் வரை இஸ்ரேல் இந்தப் போரை நிறுத்த முடியாது என்று கூறிவிட்டது. ஹமாஸ் அமைப்பினருக்கும் பாலஸ்தீனத்திற்கும் உதவியாக இருந்து வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்த்து தற்போது இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 17ம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பின் 5 ஆயிரம் பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பெரிய தாக்குதலை நாங்கள் கொடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை செய்தது.
இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர், லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உட்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் லெபனான் மீது இஸ்ரேல் ஒரு தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்ததாகவும், இதில் குழந்தைகளும் அடங்கும் என்ற தகவலும் வந்துள்ளது.
இப்படி இருதரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொள்வதால், பொதுமக்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் களமிறங்கிய நிலையில், லெபனான் - இஸ்ரேல் எல்லையில் 600 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் (UNIFIL) ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லையான நீலக் கோடு வழியாக இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அமைதியைப் பேணுவதும், பிராந்தியத்தில் வன்முறை அதிகரிப்பதைத் தடுப்பதும் அவர்களின் நோக்கம். இந்திய ராணுவ வீரர்கள் நேரடிப் போரில் ஈடுபடுவதில்லை, ஆனால் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றனர்.