இந்தியாவின் UPI சேவையை கோடிக்கணக்கான மக்கள் உள்நாட்டில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சேவைகளை பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் UPI சேவைகளைப் பயன்படுத்த, பிரான்சும் இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக நரேந்திர மோடி புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இது இந்தியப் பயனர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, அங்கு இந்திய மக்களிடையே பேசியபோது இந்தத் தகவலைத் தெரியப்படுத்தினார். அங்கிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகளிடம், "இனி நீங்கள் ஈபில் டவரில் இருந்து கொண்டே UPI சேவையை பயன்படுத்தலாம் என்றும், இதனால் உங்கள் கணக்கில் இருக்கும் இந்தியப் பணத்தை பிரான்ஸ் நாட்டில் எளிதாகப் பயன்படுத்த முடியும்" என்றும் கூறினார்.
கடந்த 2022-ல் யுபிஐ சேவைகளை வழங்கும் அமைப்பான நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பிரான்ஸ் நாட்டின் வேகமான இணைய கட்டண முறையான லைரா உடன் இணைந்து, ஒப்பந்தத்தை கையெழுத்துள்ளதாக அறிவித்திருந்தது. இது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிதும் பயன்படும் என்று கூறப்பட்டது. மேலும் 2023ல் சிங்கப்பூரின் இணைய பரிவர்த்தனை வழங்கும் Pay Now உடன் கையெழுத்திட்டதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பூட்டான், நேபாளம், யுஏஇ ஆகிய நாடுகள் யுபிஐ கட்டணத்தை ஏற்றுக்கொண்டன.
யுபிஐ சேவைகள் ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் நீட்டிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் UPI சேவைளை வளர்ந்த உலக நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் உலக நாடுகளில் அனைவரும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சேவை சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமில்லாமல் வெளிநாட்டுக்கு சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும் முக்கிய அம்சமாகும்.
இத்துடன் பிரான்ஸ் நாட்டில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நீண்ட கால ஐந்தாண்டு விசா வழங்கவும் பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒரு வளர்ந்த தேசமாக மாறுவதற்கு விரைவான முன்னேற்றங்களை செய்து வரும் இந்தியாவில், பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் இந்த புதிய ஒப்பந்தம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது இந்தியா விரைவில் வல்லரசு நாடாவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.