கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய பட்டதாரிகளுக்கான குடியேற்ற விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை மாற்றத்தின் படி இனி இந்திய மாணவர்கள் 8 ஆண்டுகள் வரை விசா இல்லாமல் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் சலுகையை பெறுகின்றனர். 2023 மே மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பட்டதாரிகள் 'மேட்ஸ்' என்ன ஒருவகை விசாவின் கீழ் இந்த சலுகையைப் பெறுவார்கள். இருப்பினும் இது நிரந்தர விசா திட்டம் அல்ல. தற்காலிகமான விசா திட்டம் என்பதை யாரும் மறக்க வேண்டாம். மேட்ஸ் திட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகள் வரை அதிகாரப்பூர்வ விசா இன்றி இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து 3000 இளம் தொழில் வல்லுனர்களை ஆஸ்திரேலியா அரசு விசா இல்லாமல் எட்டு ஆண்டுகள் வரை வேலை செய்ய அனுமதிக்கும்.
கூடுதலாக இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் மாணவர்கள் விசா ஸ்பான்சர் இன்றி இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் தங்கவும் அனுமதிக்கப் படுவார்கள். மேட்ஸ் விசா பெறுவதற்கு, நிதித் தொழில்நுட்பம், பொறியியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் இந்திய வல்லுனர்கள் தகுதி உடையவர்கள்.
ஏற்கனவே பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிநாட்டினருக்கான விசா விதிமுறைகளை எளிதாக்கி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியர்களுக்கு கை கொடுக்கும் வகையில் விசா திட்டத்தை மாற்றி இருப்பது, மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் இந்தியர்களுக்கு ஏதுவான பணிச்சூழல் சரியாக அமைத்து தரப்படும் எனவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.