இந்தியாவிலேயே முதல்முறை..! - ஹைட்ரஜன் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் கொச்சி விமான நிலையம்!

hydrogen-powered passenger bus
hydrogen-powered passenger bussource:business line
Published on

கொச்சின் சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் பேருந்துகளை நிறுத்த உள்ளது.கேரள ஹைட்ரஜன் வேலி இன்னோவேஷன் கிளஸ்டர் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்திற்காக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பேருந்துகளை இயக்கும் இந்தியாவின் முதல் விமான நிலைய நிறுவனமாக கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (CIAL) மாறும்.கேரள மின்சார அமைச்சர் கே. கிருஷ்ணன்குட்டி மற்றும் தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் முன்னிலையில் கொச்சி விமான நிலையத்தின் 0484 ஏரோ லவுஞ்சில் நடந்த விழாவில் இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்த பஸ்களை வாங்குவதற்கான நிதியுதவியை மாநில அரசின் எச்.வி.ஐ.சி., நிறுவனம் வழங்கும். இதற்காக ஒரு பேருந்துக்கு 2.90 கோடி ரூபாய் வரை அனுமதி வழங்கியுள்ளனர். மொத்த திட்டச் செலவு ரூ.8.7 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது படிப்படியாக விடுவிக்கப்படும்.

பேருந்துகள் 12 மாதங்களுக்குள் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடையற்ற ஹைட்ரஜன் எரிபொருள் வினியோகத்திற்காக பாரத் பெட்ரோலியம் மற்றும் கொச்சி சர்வதேச விமான நிலைய நிறுவனம் இணைந்து, பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக்க உள்ளது.

ஹைட்ரஜன் பேருந்துகள் (Hydrogen Fuel Cell Buses) அமைப்பதால் ஏற்படும் முக்கிய நன்மைகள்

மாசு ஏற்படுத்தும் புகை, CO₂, NOx எதுவும் இல்லாமல் நீர் மட்டுமே வெளியேறும் என்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெறுகிறது. நகரங்களில் காற்று மாசு குறைவாகும் வாய்ப்பினால் ஆரோக்கியம் மேம்பாடு ஏற்படும்.

காதை அடைக்கும் சத்தமின்றி அமைதியாக மிகக் குறைந்த சத்தத்துடன் மின்பேருந்துகளைப் போல அமைதியாக இயங்கும் வசதி இருப்பதால் பயணிகளுக்கும், நகர மக்களுக்கும் சப்தத்தால் ஏற்படும் பிரச்சினை குறையும்.

ஒரே சார்ஜில் (Hydrogen fill) 350–450 கிமீ வரை ஓடும் இதன் செயல்திறனும் குறிப்பிடத்தக்கது. 5–10 நிமிடங்களில் எரிபொருள் நிரப்பு – மின்பேருந்து போல நீண்ட நேர சார்ஜ் தேவையில்லை என்பது இதன் சிறப்பு. ஆகவே தொலைதூர பயணங்களுக்கு ஏற்றது.

இந்தியாவில் Green Hydrogen உற்பத்தி செய்தால் டீசல், பெட்ரோல் மீதான சார்பு குறைந்து எரிபொருள் இறக்குமதி குறையும் வாய்ப்பு.

இத்தனை நன்மைகள் இருந்தாலும் ஆரம்ப செலவு அதிகம் என்பதும் ஹைட்ரஜன் நிரப்பு நிலையங்கள் குறைவு என்பதும் தற்போதைய சவால்களாக உள்ளது. தற்போது கொச்சி விமானநிலையத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஹைட்ரஜன் பேருந்துகள் எதிர்காலத்தில் நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பயன்படுத்தினால் நீண்ட கால பயன்பாடுடன் பராமரிப்பு செலவு குறைவாகும் என்கின்றனர் வல்லுநர்கள்.

விரைவில் அதற்கான திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசால் முன்னெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது மக்களிடம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com