

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (ISRO), நவம்பர் 2ஆம் தேதி GSAT-7R (CMS-03) என்ற சக்திவாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைக் கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக் கோள் இந்திய கடற்படையின் தகவல் தொடர்பு வலையமைப்பை மேம்படுத்த விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தற்போது இந்திய கடற்படை தகவல் தொடர்புக்கு ருக்மினி (GSAT-7) என்ற செயற்கைக் கோள் பத்தாண்டிற்கும் மேல் பங்களித்து வருகிறது. இதற்கு பதிலாக மேம்பட்ட புதிய செயற்கைக் கோள் GSAT-7R (CMS-03) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்திய மண்ணிலிருந்து ஏவப்படும் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகக் GSAT-7R (CMS-03) இருக்கிறது.இதுவரை பயன்பாட்டில் இருக்கும் ருக்மினி செயற்கைக்கோள் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் முழுவதும் கரையோர கட்டளை மையங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியுள்ளது.
அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்:
சுமார் 4.4 டன் அளவில் அதிக எடைக் கொண்ட GSAT-7R (CMS-03) தகவல் தொடர்பு செயற்கைக் கொள் , நாட்டிலே அதிக எடைக் கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோள் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதிக எடைக் கொண்ட செயற்கை கோளை பிரெஞ்சு கயானாவிலுள்ள ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் மூலமாக ஏவுவதை தான் இஸ்ரோ வழக்கமாக கொண்டிருக்கிறது. தற்போது எடை மிகுந்த செயற்கைக் கோள்களை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட LVM3 ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்வெளியில் ஏவ உள்ளது.இது LVM3 ராக்கெட்டின் ஐந்தாவது செயல்பாடாக உள்ளது. மேலும் இந்திய மண்ணிலிருந்து ஏவப்படும் மிகப்பெரிய உள்நாட்டுத் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் என்ற பெருமையையும் GSAT-7R (CMS-03) பெற்றுள்ளது.
இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் நீல-நீர் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பான, மல்டி பேண்ட் தகவல் தொடர்புகளை வழங்க GSAT 7R (CMS-03) வடிவமைக்கப் பட்டுள்ளது. ருக்மினி செயற்கைக் கோள் கடந்த பல ஆண்டுகளாக போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இந்தியப் பெருங்கடல் முழுவதும் பாதுகாப்பான, இணைப்பை கொடுத்து வந்தது. அதனைத் தொடர்ந்து வரும் CMS-03, மேம்பட்ட பேலோடுகளுடன் வந்துள்ளது.இதில் உள்ள UHF, S, C மற்றும் Ku மல்டி பேண்ட்கள்- போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையில் ஆடியோ, வீடியோ மற்றும் டாக்குமெண்ட்களை அனுப்ப உதவும்.
இந்த மேம்பட்ட தகவல்தொடர்பு இந்திய கடற்படையின் வலையமைப்பை மையமாகக் கொண்ட போர்' (Network-Centric Warfare) திறன்களை அதிகரிக்கும். மேலும், இது பரந்த கடல் மற்றும் நிலப்பரப்பு முழுவதும் கடற்படையின் செயல்பாட்டு வரம்பை விரிவுபடுத்தி, வான் பாதுகாப்பு மற்றும் கட்டளைக் கட்டுப்பாட்டிற்கான நேரடியான தகவல்களை வழங்கும்.
ஏவுதள ராக்கெட் LVM3 உடன் GSAT-7R (CMS-03) இணைக்கப்பட்டு, அக்டோபர் 26 அன்று ஏவுதளத்திற்கு அனுப்பப்பட்டது.நேற்று வீசிய மோந்தா புயல் காரணமாக ஏவும் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இஸ்ரோவின் பணி திட்டமிட்டபடி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றிகரமான இந்த ஏவுதலுக்காக ஒட்டுமொத்த நாடும் காத்திருக்கிறது.