

நாட்டின் மிக நீளமான உயரமான கண்ணாடி பாலம் (Cantilever Glass Skywalk Bridge) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலையுச்சியில் ரூ.7 கோடி மதிப்பில் சுமார் 1000 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் விசாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபாரத் திறந்து வைத்துள்ளார்.
இந்தப் பாலம் சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கிறது. இது சுமார் 50 மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் மிக நீளமான கான்டிலீவர் கண்ணாடி பாலமாகும். இதன் அடிப்பகுதியில் எந்த பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்பது போன்ற ஒரு உணர்வை இங்கிருந்து வெளியே பார்ப்பவர்களுக்கு இப்பாலம் கொடுக்கும்.
மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் புயல்காற்று வீசினாலும் தாங்கும் அளவுக்கு உறுதியுடன் இந்த கண்ணாடிப் பாலம் அமைந்துள்ளது. பாலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் கீழே பார்க்கும் போது, அங்கேயுள்ள பள்ளத்தாக்குகளும், கண்ணைக்கவரும் இயற்கை காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வை கொடுக்கும் வகையில் இப்பாலம் அமைந்துள்ளது.
சுற்றிலும் பசுமை நிறைந்த பகுதியாக இந்த கண்ணாடி பாலம் அமைந்துள்ளது. 40 மி.மீ தடிமன் கொண்ட உயர்தர 3 அடுக்கு கண்ணாடி, 40 டன் வலுவூட்டப்பட்ட எஃகு ஆகியவை இந்தப் பாலத்தை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, 20 - 40 பேர் கொண்ட சிறிய குழுக்களுக்கு மட்டுமே 10 முதல்- 15 நிமிடங்கள் வரை அனுமதி வழங்கப்படும் எனவும், இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.300 வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் வங்காள விரிகுடாவின் பரந்த நீர்ப்பரப்பும், மறுபுறம் நகர வானலைகளுடன் பசுமையான கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் பார்ப்பவர்களுக்கு பேரானந்தத்தை தருகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் "பொன் நேரக்" காட்சிகள் கண்ணாடியில் பிரதிபலித்து, புகைப்படக் கலைஞர்களுக்கும் சாகச விரும்பிகளுக்கும் மாயாஜால அனுபவத்தை கண்முன்னே கொண்டு வரும். இந்த கண்ணாடி பாலம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க விரும்பும் இடமாக கண்டிப்பாக இருக்கும்.