விமான டிக்கெட்டிலும் அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள் இருந்ததால் பயணியை விமானத்தில் பயணம் செய்யவிடாமல் இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சென்னையில் இருந்து நேற்று மாலை 4.55 மணிக்கு மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வதற்காக சர்மேஷ் கான் என்பவர் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு புறப்பட்டபோது இண்டிகோ நிறுவன அதிகாரிகள் விமான டிக்கெட்டை பரிசோதனை செய்தனர். அப்போது டிக்கெட்டில் பாவா மெய்தீன் கான் என்றும் ஆதார் அட்டையில் சர்மேஷ் கான் எனவும் பெயர் இருந்ததால் அவரை பயணம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது எனக்கூறி திருப்பி அனுப்பினர்.
இதனால், அதிர்ச்சியடைந்த சர்மேஷ் கான், விமான டிக்கெட்டிலும், ஆதார் அட்டையிலும் பெயர் மாறி இருந்த போதிலும் பாதுகாப்பு அதிகாரிகள் அதை சரியாக பார்க்காமல் தன்னை எப்படி உள்ளே அனுமதித்தார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இண்டிகோ விமான அதிகாரிகள் அளித்த விளக்கத்தில்,”பயணச் சீட்டு பதிவு செய்யும்போது பயணிக்கும் பயணியின் பெயரை முதல் பெயராகவும், அவரின் தந்தை பெயரை இரண்டாவது பெயராகவும் பதிவு செய்ய வேண்டும்.
அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் அவரின் தந்தை பெயரை முதல் பெயராக பதிவு செய்துவிட்டதால் பயணியின் பெயருக்கு பதில் அவர் தந்தையின் பெயர் வந்துவிட்டது. இதனால், தந்தை தான் பயணிக்க முடியுமே தவிர, அவர் பயணிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.