மறைமுகமாக பரப்பப்படும் சூதாட்ட விளம்பரங்கள்: அரசு எச்சரிக்கை!

Indirectly disseminated gambling advertisements. Central government alert.
Indirectly disseminated gambling advertisements. Central government alert.

சூதாட்டம் சார்ந்த விளம்பரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒளிபரப்ப வேண்டாம் என ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை கடைபிடிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். 

இது குறித்து ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இணையத்தில் விளம்பரம் போடுபவர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களை நடத்துவோர், எந்த வடிவத்திலும் சூதாட்டம், பந்தயம் குறித்த விளம்பரங்களையோ அல்லது விளம்பர உள்ளடக்கத்தையோ காட்டுவதை தவிர்க்குமாறு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது. இதை கடைப்பிடிக்க தவறும் ஊடகங்கள் மீது பல்வேறு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

சூதாட்டம் மற்றும் இணைய விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பொருளாதார ஆபத்து ஏற்படுகிறது. சூதாட்டத்தில் பயனர்களிடமிருந்து அதிகப்படியான பணத்தை வசூலித்த முகவர்களை எதிர்த்து சமீப காலமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய மோசடி நெட்வொர்க்களால் நாட்டின் நிதிப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற சட்டவிரோத விளம்பரங்களுக்கு பணம் செலுத்துவதற்கு கருப்பு பணம் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், கிரிக்கெட் போட்டிகள் உட்பட எந்த விளையாட்டு நிகழ்வுகளின் போதும் சூதாட்டம் சார்ந்த விளம்பரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்துவதற்கு எதிராக, இணைய ஊடக தளங்களுக்கு மத்திய அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இல் திருத்தப்பட்ட விதிகளின்படி சூதாட்ட இடைத்தரகர்கள் நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சூதாட்டம் சார்ந்து அதனை தூண்டும் வகையில் எந்த ஒரு தகவலையும் வழங்கவோ, காட்சிப்படுத்தவோ, வெளியிடவோ, பதிவேற்றவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, பகிரவோ கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இத்தகைய சூதாட்ட விளம்பரங்களால்  பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com