வீட்டிலிருந்து பணி செய்பவர்கள் ஓரளவுக்குத் தான் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அதிகமாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் விளைவு வேறு மாதிரி இருக்கும் என தன் ஊழியர்களுக்கு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இன்போசிஸ் நிறுவனம்.
எல்லா நிலைமைகளும் கட்டுக்குள் வந்த பிறகும், கொரோனா காலத்தில் அறிமுகமான ஒர்க் பிரம் ஹோம் முறையானது பெரும்பாலான ஊழியர்களை இன்றளவும் வீட்டிலேயே வைத்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை அவ்வளவாக விரும்புவதில்லை. கூகுள் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஒர்க் ப்ரம் ஹோம் கொள்கையை முடிவுக்கு கொண்டு வரவே நினைக்கிறார்கள். இவர்களின் வரிசையில் இந்திய ஐடி நிறுவனமான இன்போசிஸும் தற்போது இணைந்துள்ளது.
இந்நிறுவனம் குறிப்பிட்ட சில பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்புமாறு கடுமையான உத்தரவை வெளியிட்டுள்ளது. அவர்களின் சமீபத்திய அறிக்கையின் படி, அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள இன்போசிஸ் ஊழியர்கள், அலுவலகத்திற்கு வந்து தன் பணியைத் தொடரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் எந்த ஊழியராவது வீட்டிலிருந்து பணி செய்ய விரும்பினால், அவர்கள் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும் என்றும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் ரிமோட் வொர்க் தொடர்பான இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய பாலிசியை கடைப்பிடிக்கத் தவறினால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்போசிஸ் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகும். பணியாளர்களை அலுவலகத்திற்கு வர வைக்கும் இந்த புதிய பாலிசி, இந்தியாவிலுள்ள இன்போசிஸ் அலுவலகங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு கொண்டுவரும் திட்டத்தை கடந்த ஆண்டு இந்நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது. முதற்கட்டமாக ஊழியர்கள் அவர்களின் விருப்பம் போல வாரத்திற்கு இருமுறை அலுவலகத்திற்கு வர வேண்டும் என சொல்லப்பட்டது.
இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, எல்லா ஊழியர்களும் அலுவலகம் வந்து பணிபுரியும் வகையில், ஹைபிரிட் பணிக் கொள்கை உருவாக்கப்படும் என நம்பப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தின் இணைய நிறுவனர் 'நாராயணமூர்த்தி', "இளைஞர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் வலையில் விழ வேண்டாம்" என எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.