
உலக அளவில் ஐடி துறையே ஆட்டம் கண்டது போல் தான் இருக்கிறது. கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட தனது ஊழியர்களை அடிக்கடி வேலையை விட்டு நீக்கி வருகிறது. ஏனெனில் AI வந்த பிறகு டெக் துறையில் புரட்சி ஏற்பட்டாலும், அது ஊழியர்களை வேலையை காலி செய்து வருவது பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. எப்போது யார் வேலை போகும் என்பதே தெரியாத அளவுக்கு மனஉளைச்சலில் ஐடி ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், நிலையான வேலை (9.15 மணிநேரம்) நேரத்தை மீறும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பெங்களூருவை தளமாகக் கொண்ட அந்நிறுவனம், ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 9¼ மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ளது.
அலுவலகத்தில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது தொலைதூரங்களில் அதாவது வீடுகளில் இருந்து பணிபுரிபவர்களும் 9.15 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவு பறந்துள்ளது. அதேபோல் தற்போது மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அந்த நேரத்தை தாண்டி ஊழியர்கள் பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க தானியங்கி கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. யாராவது 9¼ மணி நேரத்தை தாண்டி பணியாற்றினால், அந்த கருவி எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்யும். இந்த கணக்கீட்டில் பணிநேரம் அதிகமாக இருந்தால், அவையும் விரிவாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். தொலைதூரப் பணி, வீட்டில் இருந்து பணி, மொத்த பணி நேரம், நாளொன்றுக்கு சராசரி பணிநேரம் என அனைத்து தரவுகளும் கோப்புகளாக பராமரிக்கப்படும்.
மேலும், கம்பெனியின் மனிதவள துறை, மாதந்தோறும் ஊழியர்களின் பணி நேரத்தை கண்காணிக்கிறது. பணி நேரத்தை தாண்டி வேலை செய்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுக்கிறது. ‘உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், அதே நேரத்தில் ஆரோக்கியத்தை கடைபிடிப்பது உங்களுக்கு நல்லது, வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிப்பது உங்கள் நல்வாழ்வு மற்றும் நீண்டகால தொழில்முறை வெற்றிக்கு மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று அதில் அறிவுறுத்துகிறது.
‘இன்போசிஸ்’ நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்தியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் பணியாற்றினால்தான் பொருளாதார
வளர்ச்சியை விரைவுபடுத்தலாம் என்று சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு முற்றிலும் எதிராக அந்த நிறுவனம் இக்கொள்கையை கடைபிடித்து வருகிறது. இந்த நடவடிக்கை இந்திய ஐடி துறையில் வளர்ந்து வரும் பணியிட விதிமுறைகளை பிரதிபலிக்கிறது. அங்கு ஊழியர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நிலையான உற்பத்தித்திறன் நீட்டிக்கப்பட்ட வேலை நேரங்களை விட முக்கியத்துவம் பெறுகிறது. இளம் தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள், நேரம் தவறி சாப்பிடுவதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.