தயார் நிலையில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்!

தயார் நிலையில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்!

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை கமாண்டர்களின் மாநாடு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மிக்-29கே ரக போர் விமானமும், தேஜஸ்-எம் ரக விமானமும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன. இந்த கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய ஹெலிகாப்டர்களும் உள்ளன. இந்த கப்பல் வரும் ஆண்டுகளில் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தவுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை போருக்கு முழு அளவில் தயார் செய்யும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு இறுதியில் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் போருக்கு முழு அளவில் தயாராகிவிடும். அதேபோல் கடற்படையில் ஏற்கெனவே உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பலில் 15 மாத கால பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்து வரும் 31-ம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் இதில் போர் விமானங்களை தரையிறக்கவும், இயக்கவும் பரிசோதனைகள் நடக்கும்.

இந்த கப்பல் மிக்-29 கே ரக போர் விமானங்களுடன் வரும் மே மாதத்துக்கு முன்பு தயார் நிலைக்கு வந்துவிடும். இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல். கடற்படையில் உள்ள இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களும் இந்தாண்டு தயார் நிலைக்குவந்து விடுவதால், இவற்றில் இயக்குவதற்கு தேவையான 26 போர் விமானங் களை வாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான போட்டியில் அமெரிக்காவின் எப்-18 ரக போர் விமானங்களும், பிரான்ஸ் நாட்டின் ரஃபேல்-எம் ரக போர் விமானங்களும் உள்ளன.

இந்த இரண்டு ரக போர் விமானங்களையும், இந்திய கடற்படை கோவாவில் உள்ள தளத்தில் கடந்தாண்டு பரிசோதித்து பார்த்தது. இதன் அறிக்கை பாதுகாப்புத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் அறிவுரைப்படி இறுதி முடிவு எடுக்கப்படும். சீனா தனது கடற்படையில் போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. தற்போது அதனிடம் 3 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

இந்நிலையில் இந்திய கடற்படையில் உள்ள 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களும் இந்தாண்டு முழு அளவில் செயல்படத் தயாராகிவிடும். 2025-ம் ஆண்டுக்குள், இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை ரோந்துப் பணியில் சீனா ஈடுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீன கடற்படையின் அத்துமீறல்களை தடுக்கும் அளவுக்கு குவாட் அமைப்பு நாடுகளின் கடற்படைகளின் திறனை அதிகரிக்க வேண்டும். இந்திய கடற்படையின் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாலும், அதன் முழுக் கவனமும் இந்திய பெருங்கடல் பகுதியில்தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தைவானுக்கு சீனா அச்சுறுத்தல் விடுப்பதால், ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க் கப்பலை 2025-ம் ஆண்டுக்குள் மாற்றிவிட்டு, அதற்கு பதில் யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பலை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த போர்க்கப்பலில் உள்ள விமானங்கள் கப்பலில் இருந்து 800 கி.மீ தொலைவுக்கு அப்பாலும் வானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ள முடியும். இதன் மூலம் அமெரிக்க போர்க்கப்பல் சீனாவின் ஏவுகணைகள் தாக்கும் தூரத்துக்கு அப்பால் இருந்தும் செயல்பட முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com