ஸ்ரீரங்கம் கோயில் கோபுரங்களின் தரத்தை ஆய்வு செய்ய குழு : அமைச்சர் உத்தரவு!

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரங்களின் தரத்தை ஆய்வு செய்ய குழு : அமைச்சர்  உத்தரவு!
Updated on

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் சிலப் பகுதி சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதை அடுத்து இன்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு கோவிலின் அனைத்து கோபுரத்தையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் சாமி திருக்கோயில் கிழக்கு வாசல் கீழகோபுரம் சில தினங்களுக்கு முன்பு சில பகுதிகள் இடிந்து விழுந்தது. நள்ளிரவு 1:30 மணி அளவில் இடிந்து விழுந்ததால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். இதைத்தொடர்ந்து இன்று ஆகஸ்ட் 8 தேதி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தை ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கிழக்கு வாசல் கோபுரம் உட்பட 21 கோபுரங்களையும் ஆய்வு செய்து, அதனுடைய சிறத்தன்மையை கண்டறிந்து கூறுவதற்காக என்ஐடி நிபுணர்களைக் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 21 கோபுரங்களை ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்யும்.

2015-ம் ஆண்டு 34 லட்சம் ரூபாய் செலவில் இடிந்த விழுந்த கோபுரத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்திருக்கிறது. தற்போது 94 லட்சம் செலவில் மராமத்துப் பணிக்கு ஆணையரிடம் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீரங்கம் கோயிலின் 3 பிரகாரங்களிலும் இருக்கின்ற மரங்கள் சிதிலமடைந்திருக்கின்றன. அவை அனைத்தையும் மாற்றக்கூடிய பணியும் செய்ய வேண்டி இருக்கிறது. இந்தப் பணிகளை முடிக்க ஓராண்டுக்கு மேலாகும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com