
கொரானா தொற்று உலகமெங்கம் பயமுறுத்திக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டு நாடுகள் ஈகோ யுத்தத்தில் இறங்கின. ஓராண்டு நிறைவு பெறும் நேரத்தில் யாருக்கு இழப்பு, யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாத பரிதாப நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்த உலகப்போர்களை பார்த்திருக்கிறோம். ஆனால், இரு தரப்பும் குழம்பிப் போன நிலையில் உள்ள உலகப்போரை இப்போதுதான் பார்க்க முடிகிறது. வளைகுடாப் போர் நடந்தபோது கூட இழப்புகள் குறித்த சரியான தகவல்கள் கிடைத்தன. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் உக்ரைன் போர் இழப்புகளை சரிபார்க்க இயலாத நிலைதான் நீடிக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா, தனது ராணுவ நடவடிக்கையை 11 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்பாராத விதமாக உக்ரைன் பதிலடி தர ஆரம்பித்தது. நான்கு நாட்களில் முடிந்துவிடும் என்று நினைத்த யுத்தம், நான்கு மாதங்களுக்கு நீடித்தபோதுதான் இதுவொரு ஈகோ யுத்தம் என்பதே வெளிச்சத்திற்கு வந்தது.
இரு தரப்பிலும் பாதிப்புகள் அதிகம். உக்ரைன் அரசு தரப்பில் ராணுவ நடவடிக்கைகள், ரஷ்யா தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து புள்ளி விவரங்கள் வெளியிடப்படுகின்றன. 2022 பிப்ரவரி மாதம் தொடங்கி, இதுவரை 1,16,950 வீரர்களை ரஷ்யா இழந்திருப்பதாக உக்ரைன் தெரிவிக்கிறது.
உக்ரைன் தரும் தகவலில் உண்மை இருந்தால், முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்த வீரர்களை விட ரஷ்யா இழந்துள்ள வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ரஷ்யாவிற்கு சொந்தமான 3,121 பீரங்கிகள், 4,877 வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீரங்கிகள் போன்றவை தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் போரில் இதுவரை ஆறாயிரத்திற்கும் குறைவான ரஷ்ய வீரர்களே இறந்திருப்பதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.
உக்ரைன் போரின் விளைவுகள் பற்றிய உண்மையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை போர் முடிந்தால், வெளிவரப்போகும் புகைப்படங்கள் தரும் அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளும் மனவலிமை நமக்கு வாய்க்கட்டும்!