அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு!

அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு!

பொதுமக்களிடம் சேமிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த இந்திய அஞ்சல் துறை பல சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அவை கிராம மக்களுக்கு நல்ல பலன்களைத் தந்தன. அதேபோல், இந்திய அஞ்சல் துறையும் வங்கிகளைப் போன்றே பொது மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல முதலீட்டுத் திட்டங்களையும் வழங்கி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என வருமான வரியில் இருந்து விலக்கு  அளிக்கக் கூடிய சேமிப்புத் திட்டங்களையும் அஞ்சல் துறை வழங்கி வருகின்றன.

இந்திய அஞ்சல் துறையின் சார்பாக செயல்பட்டுவரும் ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் சேமிப்பு கணக்கு, ஐந்து வருட ரெக்கரிங் டெபாசிட் கணக்குகள், டைம் டெபாசிட் கணக்கு, மாதாந்திர வருமான திட்ட கணக்கு, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், பிபிஎஃப், ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் திட்டம்) போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

இதில் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் அஞ்சல் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளன. வங்கிகளில் 3.5 சதவீதம் மட்டுமே லாபம் கிடைக்கும் நிலையில், தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. இதற்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை 500 ரூபாய் மட்டுமே. இந்தத் தொகையை வைத்துக் கணக்கை துவங்கும்போது செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் பெற முடியும். சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும். இதேபோல, தபால் அலுவலக டெபாசிட் கணக்குக்கு 7 சதவிகித வட்டி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தேசிய சேமிப்பு திட்டத்தில் இதுவரை 7 சதவிகிதம் மட்டுமே வட்டியை மத்திய அரசு அளித்துள்ளது. தற்போது 70 புள்ளிகளை அதிகரித்து 7.7 சதவிகிதம் வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டு திட்டத்தில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கியின் சேமிப்பினால் கிடைக்கும் வட்டியை விட அதிக வட்டி அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் மூலம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com