நாம் அனைவரும் ஏதோவொரு துறையில் இயங்கி வந்தாலும் நம்மைக் காக்கும் காவல்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை, ராணுவம், போன்ற துறையினரை என்றும் மதித்துப் போற்றுவோம். அந்த வரிசையில் நம்முடனே கலந்து நம் இடர்களைக் களைபவர்களான தீயணைப்புத்துறை வீரர்களின் துணிவையும் தியாகத்தையும் போற்றிப் பாராட்டும் வகையில் உருவானதுதான் சர்வதேச தீயணைப்பு தினம்.
இந்தியாவில் 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மும்பை துறைமுகத்தில் நடந்த தீ விபத்தில் 71 தீயணைப்பு வீரர்கள் மடிந்தனர். அவர்களது உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தேசிய தீயணைப்பு தினமாக நம் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது
1999 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஐந்து தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக இறந்ததை முன்னிட்டு அவர்களின் தியாகத்தைப் போற்ற உலகம் முழுவதும் கடிதங்கள் அனுப்பப்பட்டு விடுத்த கோரிக்கையின் விளைவாக ஏற்படுத்தப்பட்டதே இந்த தினம்.
நம்மைப் படைத்த நாம் வாழ்வதற்கு ஏதுவாக பஞ்சபூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயத்தையும் படைத்தது பிரபஞ்சம். இவைகளால் மனிதர்களுக்கு நன்மைகள் இருந்தாலும் அதே அளவுக்கு பெரும் ஆபத்துகளும் ஏற்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. நம்மை மீறிய இயற்கை சீற்றங்களுக்கு இயற்கையுடன் நமது அஜாக்கிரதையும் வாழும் முறையும் கூட ஒருவகையில் காரணமாகலாம் என்கின்றனர் அறிவியலாளர்கள். நாம் சற்றும் எதிர்பாராத சமயத்தில் திடீரென ஏற்படும் மழை வெள்ளம் பயங்கர தீவிபத்து கொடும்புயல் போன்றவைகளால் பொருள் சேதங்களுடன் உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன. சமயங்களில் நம்மை நம்பி வாழும் வாயில்லா ஜீவன்களும் புதைக்குழி, சாக்கடை போன்ற விபத்துகளில் மாட்டுகின்றன.
இது போன்ற ஆபத்தான நேரத்தில் நாம் உடனே அழைப்பது தீயணைப்பு நிலையத்தைதான். தகவல் பெற்றதும் எந்த நேரம் என்றாலும் உடனே பாதுகாப்பு சீருடை அணிந்த சிவப்பு நிற வாகனத்தில் மணி சப்தம் எழுப்பியபடி சீறிக்கொண்டு மீட்புப்பணிகளில் ஈடுபடுவார்கள் தீயணைப்பு வீரர்கள். அப்போது தீயில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மற்ற உயிர்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பணயம் வைத்து துணிச்சலுடன் செயல்படும் தீயணைப்பு வீரர்கள் உண்மையில் அந்த நேரத்தில் காப்பற்றப் பட்டவர்களுக்கு தெய்வமாகவே தெரிவார்கள்.
கோடைகாலத்தில் திடீரென்று ஏற்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பரவும் காட்டுத்தீயும், மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமும் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலைத் தரும் விஷயங்கள். ஆனால் அது போன்ற நேரங்களில் என்ன செய்ய வேண்டும் எப்படி மற்றவர்களுடன் தங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை பயிற்சிகளின் மூலம் கற்றுத் தெரிந்து துணிச்சலுடன் அவற்றை கட்டுக்குள் கொண்டுவந்து களப்பணியில் ஈடுபடும் இவர்களின் தேவை என்றாவது மட்டுமே என்பதால் நம் கவனத்திற்கு வருவதில்லை இவர்கள்.
தீயணைப்பு வீரர்கள் தின சின்னங்களாக சிவப்பு மற்றும் நீல நாடாக்கள் உள்ளன. அவைகள் ஐந்து சென்டிமீட்டர் நீளமும் ஒரு சென்டிமீட்டர் அகலமும் கொண்டு இரு தனித்தனி நிறங்களாக மேலே இணைந்திருக்கும் .சிவப்பு நிறம் நெருப்பையும் நீல நிறம் தண்ணீரையும் குறிக்கிறது. பொதுவாகவே இந்த வண்ணங்கள் அவசர சேவைகளைக் குறிக்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறங்கள் என்பதை அறிவோம்.
1908 ஆம் ஆண்டு சென்னையில் பதினாறு இடங்களில் தீயணைப்புப் பிரிவு பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டு மெட்ராஸ் தீயணைப்புப் படை உருவாக்கப்பட்டது. பின்னாட்களில் தீயணைப்புத்துறையின் முக்கியத்துவம் உணரப்பட்டு 1967 ல் மாநிலத்தின் வளர்ச்சிக்கேற்ப தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு காலகட்டங்களில் தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கையையும் மீட்பு ஊர்திகளின் எண்ணிக்கையும் உயர்த்தி தீயணைப்புத்துறை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நமக்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கும் அவர்களது தன்னலமற்ற சேவைக்கும் இணையற்ற செயலுக்கும் தலைவணங்கி அவர்களுக்கு உரிய மதிப்பையும் உதவிகளையும் வழங்குவோம். அதை விட தீயோ வெள்ளமோ எந்த இடர்கள் வந்தாலும் ஓடி வந்து உதவி செய்யும் இவர்களுக்கு உபத்திரவங்கள் தராமல் முடிந்த அளவு ஒத்துழைப்பை தரவேண்டியது நமது கடமை. அத்துடன் நமது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக் களையும் எச்சரிக்கையுடன் தவிர்ப்பது நல்லது.