கருவில் சுமப்பவள் அம்மா; மனதில் சுமப்பவன் நண்பன். ஆம், அன்னையிடம் சொல்ல முடியாததையும் நம்பிக்கையான நண்பனிடம் சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் வாழ ஒரு பற்றினைத் தருவது நட்பு என்றால் அது மிகையில்லை. ‘உயிர் கொடுப்பான் தோழன்’ என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. பல பிரச்னைகளில் நொந்து வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பவருக்கு ஆறுதல் சொல்லி காப்பாற்றி அவர் வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்துவது பெரும்பாலும் நல்ல நண்பர்களாக அல்லது தோழிகளாகத்தான் இருப்பார்கள். சொந்த பந்த உறவுகளிடையே இருக்கும் போட்டி, பொறாமை, நான் எனும் ஈகோ, அந்தஸ்து பேதம் போன்றவை இல்லாத தூய உறவு என்றால் அது நட்பு மட்டுமே.
நம் வாழ்வோடு ஒன்றிப்போய் இருக்கும் திரைப்படங்களில் நட்புக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். அதுபோன்ற படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். உதாரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘குசேலன்’ படத்தை சொல்லலாம் . எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் உதவி செய்த பள்ளித்தோழனை மறவாமல் ஊரார் முன்னிலையில் நன்றி சொல்லி மகிழும் நண்பராக ரஜினி கண் கலங்கும்போது, அதைப் பார்த்த நமக்கும் கண்கள் கசிந்ததை மறக்க முடியுமா? பிறிதொரு படத்தில் வந்த நடிகர் சந்தானத்தின் ‘நண்பேன்டா’ எனும் புகழ்பெற்ற இக்கால இளைஞர்கள் கொண்டாடும் வசனமாயிற்றே ? கிருஷ்ணர் - குசேலர், ராமர் -குகன் போன்ற புராணக்கதைகள் முதல் இந்தக் காலம்வரை, ஏன் வரும் காலத்திலும் நட்பு என்பது உலகை ஆட்சி செய்யும் சுயநலமற்ற அடிப்படை அன்பு ஆகிறது.
வாழ்க்கையில் பணம், பொருள், புகழை சம்பாதிக்க நேரம் காலம் பாராமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர உலகத்தில் நமது அத்தனை கவலைகளையும் மறந்து, மனம் விட்டு பேசவும் நாம் சோர்ந்திருக்கும் நேரங்களில் கரம் தந்து உதவவும் நல்ல நண்பர்கள் இருப்பது ஒரு பெரும் அதிர்ஷ்டம் எனலாம். இந்தத் தினத்தில் மட்டுமல்ல, என்றுமே நமது நேசத்திற்குரிய நண்பர்களைக் கொண்டாடி மகிழ வேண்டும் .
இன்று அலைபேசி நமது நேரங்களை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது. சுகம், துக்கம் அனைத்தையும் அதில் வரும் ஸ்மைலி, ஹார்டின் போன்ற சின்னங்களில் வெளிப்படுத்தி அடங்கி விடுகிறோம். கடவுளை மனதுக்குள் வைத்து வணங்கினாலும் அவன் குடிகொண்டுள்ள சன்னிதியில் சென்று வணங்கும்போதுதான் நமக்கு மனநிறைவு அதிகம் கிடைக்கும். அதுபோலத்தான், அலைபேசியில் வளர்க்கும் நட்பை விட, ஆத்மார்த்தமாக நேரில் பார்த்து மகிழும் நட்புக்கு அதிக வலிமையுண்டு.
முன்பெல்லாம் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்றால் அந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கவனிப்பார்கள். இன்று அப்படி இல்லை, எனினும் நீங்கள் சேர்க்கும் நண்பர்களே உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நன்மை, தீமைகளை நிர்ணயிப்பார்கள் என்பது உண்மை. உதாரணமாக, மது அருந்துவதில் உங்களுக்கு விருப்பமே இல்லை எனினும் நண்பரின் கட்டாயத்துக்காக அதை அருந்தினால் அதன் பின்விளைவுகள் தீமையே தரும். ஆன்மிகத்திலோ சேவையிலோ உங்களுக்கு ஆர்வம் அதிகம் இல்லை எனினும், உங்கள் நட்புக்காக அதில் நீங்கள் காட்டும் ஆர்வம் பின்னாட்களில் நன்மையையே தரும். ஆகவே, உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் நட்பைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்கக் கற்றுக் கொடுங்கள். எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் நல்ல நண்பர் அமைந்தால்.
இப்படி மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நட்பின் முக்கியத்துவத்தையும் அதன் பிணைப்பைக் கொண்டாடவும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமையில், ‘சர்வதேச நண்பர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பல நாடுகளில் ஜூலை 30ம் தேதி என்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டாலும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் மாதம் முதலாவது ஞாயிற்றுக்கிழமைதான் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நமக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் நமது அன்பிற்குரிய நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழ்வது நமது கடமையாகும்.