சர்வதேச நிலவு தினம். நிலவில் மனிதர்!

சர்வதேச நிலவு தினம், ஜூலை 20
சர்வதேச நிலவு தினம். நிலவில் மனிதர்!

ரவின் இருளில் கருமை சூழ நடுவில் வட்ட வடிவில் வெண்ணிற ஒளியை வீசி கண்களையும் மனதையும் கவரும் நிலவை விரும்பாதவரும் உண்டோ ? கவலையற்ற சிறு குழந்தைகள் முதல் பிரச்சினைக்கு இடையில் வாழும் மனிதர் வரை வயது வித்தியாசமின்றி நிலவிடமே ஆறுதல் தேடுவது வழக்கம்.

அன்று நிலவை அண்ணாந்து பார்த்த மனிதர்கள் இன்று அதே நிலவில் கால் பதித்து வருகின்றனர். பூமியின் நிரந்தரமான இயற்கை துணைக்கோளாகும் நிலவு, சூரிய குடும்பத்தில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளாகவும் இரண்டாவது அடர்த்தி மிகு துணைக்கோளமாகவும் உள்ளது. நம் கண்களுக்கு நிலவானது வெண்மை நிறத்தில் இருந்தாலும் உண்மையில்  இதன் தரைப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளது.


பூமிக்கும் நிலவுக்கும் உள்ள சராசரி தொலைவு 3,84, 43 கிலோமீட்டர் ஆகும். நிலவின் அழகில் மயங்கிய மனிதன் அதற்கு செல்லும் முயற்சியை செய்ய ஆரம்பித்தான். அந்த முயற்சியில் முதலில் ஈடுபட்ட ரஷ்யா 1961 ஆம் ஆண்டு முதல் முயற்சியைத்  துவங்கி தோல்வி அடைந்தது. அதே நேரம் உலகின் பெரிய நாடான அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பும் முதல் நாடாக அமெரிக்கா இருக்கும் என்று அறிவித்து ஆய்வுகளை மேற்கொண்டது. சுமார் 8 ஆண்டுகள் தொடர் ஆய்வுக்கு பின்னர் 1969 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது அமெரிக்கா.

இந்த விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய அமெரிக்க வீரர்கள் நிலவுக்கு புறப்பட்டனர். சில நாட்கள் வெற்றிகரமான பயணத்திற்கு பின்னர் நிலவின் அருகே விண்கலம் சென்றதும் மைக்கேல் காலின்ஸ் மின்கலத்தில் தங்கிவிட ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் இருவர் மட்டும் ஈகிள் என்ற சிறிய விண்வெளி ஓடத்தில் பயணித்து நிலவின் மேற்பரப்பை அடைந்தனர். அங்கு ஓடம் தரையிறங்க ஏற்கனவே திட்டமிடப்பட்ட  இடத்தில் பாறைகள் அதிகமாக இருந்ததால் சில அடி தூரம் தள்ளி தரை இறக்கினர். அதனால் ஏற்பட்ட தடை காலதாமத்தையும் தாண்டி சுமார் ஆறு மணி நேரம் காத்திருப்புக்குப் பின் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 20ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதல் முதலில் நிலவில் கால் பதித்து உலகை திரும்பி பார்க்க வைத்தார்

இது உலக அளவில் உற்று நோக்கிய வரலாற்று நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா அமெரிக்கா சைனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாவும் தற்போது நிலவை ஆய்வு செய்யும் நான்காவது நாடாக இணைந்து. பல ஆராய்ச்சிகள் செய்து முதற்கட்டமாக கடந்த ஜூலை 14-ஆம் தேதி சந்திராயன் 3  விண்கலத்தை சுமந்து கொண்டு எல் வி எம் 3 - எம் 4 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அனைவரும் அறிவோம் விரைவில் அதன் வெற்றியை ருசிக்கும் பெருமைக்குரிய தருணத்தை எதிர்நோக்கி காத்துள்ளோம்.

பூமியைத் தவிர்த்து மனிதர்கள் கால் பதித்த ஒரே துணைக்கோள் நிலவாகும். அரும்பாடுபட்டு நிகழ்த்திய இந்த சாதனையின் பெருமையை அமேரிக்கா தக்க வைத்தாலும் உலகம் முழுவதும் இந்த நிகழ்வை அங்கீகரித்துள்ளது எனலாம்.

ஆகவேதான்  மறக்க முடியாத வரலாற்று நிகழ்வை, நிகழ்வினை நினைவு கூறும் விதமாக முதன் முதலில் நிலவில் மனிதன் கால்பதித்த தினமான ஜூலை 20ஆம் தேதி சர்வதேச நிலவு தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com