சர்வதேச உணவுக் கட்டுப்பாடு இல்லாத தினம் – நோ டயட், நோ ஷேம்!

மே – 6 நோ டயட் டே!

சர்வதேச உணவுக் கட்டுப்பாடு இல்லாத தினம் – நோ டயட், நோ ஷேம்!

“அம்மா இன்னிக்கு நைட் சாப்பிட எதுவும் வேண்டாம்.

எப்பப்பாரு காலையில என் பொண்ணு சாப்பிடறதே இல்லை ஒரு வேளைதான் சாப்பிடறா கேட்டா டயட்டு கியட்டுன்னு காரணம் சொல்றா...

“நல்லாதானே டயட்ல இருந்தே நீ இப்படி ஆயிட்ட? இது போன்ற டயலாக்குகள் நம் காதுகளில் அடிக்கடி கேட்ட வண்ணம் உள்ளது.

     தற்போது பெண்கள் முதல் ஆண்கள் வரை தங்கள் அழகான தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருவது அதிகமாகி வருகிறது. உடல் பருமனால் நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் தங்கள் எடையைக் கட்டுக்குள் வைக்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போராடி வருகின்றனர். உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிமுறைகளை நாடுகின்றனர். அதில் ஒன்றுதான் டயட். அதாவது உணவுக் கட்டுப்பாடு.

     முன்பெல்லாம் பெரியவர்கள் நடுத்தர வயதினரிடம் மட்டுமே இருந்த இந்த டயட் உணவு பழக்கமுறை தற்போது பள்ளி செல்லும் சிறுவர்கள் இளைய தலைமுறையினரிடம் இருப்பது வேதனை தரும் விஷயம். காரணம் நம்மிடையே மாறி வரும் உணவுக் கலாச்சாரம். நம் நாட்டில் உள்ள சத்தான உணவுகளை உண்ட நம் பாட்டியும், தாத்தாவும் இன்றும் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால் மேலைநாட்டு உணவுகளை உண்டு உடல் பருமன் இன்ன பிற உடல் உபாதைகளால் வயிற்றை பட்டினி போடும் டயட்டைக் கடைப் பிடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இன்றைய தலைமுறை உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள்.

      உடல் பருமனாக இருப்பவர்கள் தங்களது உடல் எடையைக் குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு ஒன்றுதான் தீர்வு என்ற மனநிலையில் உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் தவறான வழியை தேர்ந்தெடுத்து உடலுக்கு தீங்கு விளைவித்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் உணவை குறைவாக எடுத்துக் கொள்வதும் பசிக்கு சாப்பிடாமல் இருப்பதும்தான். பசியுடன் இருக்கும்போது ஏற்படும் உடல் சோர்வு உடல்நலனைப் பாதிக்கும் என்பதுதான் உண்மை.  மேலும் உடலில் உள்ள கொழுப்பை அதிவேகத்தில் குறைத்து எடையைக் கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று தரமற்ற தனியார் நிறுவனங்கள்  விளம்பரப்படுத்தும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டும், அறுவை சிகிச்சையை  செய்து கொண்டும் பலர் மனதளவில் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

    ஆனால் என் உடல் இப்படித்தான் இந்த பருமனும் அழகுதான் என்று எண்ணி தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நடப்பவர்களுக்கான நாள்தான் இது. ஆம் ஒரு புறம் டயட்டினால் அழகைப் பேணுபவர்கள் இருக்க மறுபுறம் டயட்டினால் ஒன்றும் நடக்கவில்லை. என்ன... நேரம் போனதுதான் கண்ட பலன் என்று புலம்பி டயட்டை வெறுப்பவர்களும் உண்டு.

    இப்படி தன் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்காக டயட்டைக் கடைப்பிடித்து உடல் வளர்ச்சிப் பிர்ச்சினை, பசியின்மை, பலவீனமடைதல் போன்ற பல அனுபவங்களைப் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த ஆலோசகரான மேரி எவன்ஸ் யாங் அதிலிருந்து மீண்டு டயட் உணவுப் பழக்கத்துக்கு  எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தன்னைப் போலவே பலரும் உடல் அழகை மேம்படுத்த டயட்டைக் கடைபிடித்து அவதிப்படுவதை பார்த்து உடல் எப்படி இருந்தாலும் அது நம் உரிமை என்பதை உணர்த்த பல ஆண்டுகளாக போராடினார். தொடர்ந்து அவர் தன் குழுவினருடன் சேர்ந்து 1992 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதியை சர்வதேச உணவு கட்டுப்பாடு முறை  இல்லாத தினமாக அறிவித்து கடைப்பிடித்தார். இதுதான் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், டென்மார்க், ஸ்வீடன் போன்ற உலக நாடுகளிலும்   பின் நாளில் இந்தியாவிற்கும் பரவி சர்வதேச உணவு கட்டுப்பாடு இல்லாத அதாவது நோ டயட் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

    அழகு என்பது உடலில் இல்லை நம் தன்னம்பிக்கை நிறைந்த செயல்களிலும் நல்ல எண்ணங்கள் கொண்ட மனதிலும்தான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து என் உடல் என் உரிமை என்று நிமிர்ந்து வாழப் பழகினால் கடும் டயட் போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com