சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் ... அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துரை!

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் ... அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துரை!
Published on

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மகளிரை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது என சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நம் சகோதரிகளால் நம் நாடே பெருமை கொள்கிறது.சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி , எண்ணற்ற தடைகளை தகர்த்தெறிந்து, தனிப்பெரும் ஆளுமையாக திகழ்ந்து, சாதனைகள் பல படைத்து, வீட்டையும், நாட்டையும் முன்னேற்றும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பெண்களின் நலன் பேணுவோம், பெண் கல்வியை ஊக்குவிப்போம் எனவும் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகளை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் , பாலினப் பாகுபாடுகள் தகர்த்தெறிவோம், பாரெங்கும் மகளிர் உரிமைகள் நிலைநாட்டுவோம் என தெரிவித்துள்ளதோடு, உரிமைப் போராளி மகளிர் யாவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்பும் அறமும் மனிதர்களிடம் தழைத்தோங்க உயிர் கொடுக்கும் தாய்மையை போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். உலக மகளிர் தினத்தில் மட்டுமின்றி என்றென்றும் பெண்களைப் போற்றினால் மட்டுமே உலகம் அன்புடனும் அறத்துடனும் நிகழும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பெண் எனும் பேராற்றல் என்ற தலைப்பில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில், பெண்களுக்கான உரிமையைப் பேசும் அதே நேரத்தில், அவர்களுக்கான நடமாடும் உரிமையே கேள்விக்குறியாகும் விதத்தில் நாள்தோறும் நடந்தேறும் பாலியல் வன்முறைகளை தடுத்தது, ஒட்டு மொத்தப்பெண் சமூகத்தின் காத்திட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com