தென்னை நார்களை பதப்படுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

தென்னை நார்களை பதப்படுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜி.சரவணமூர்த்தி எனும் இளைஞர் தென்னை நார் பதப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அது சுற்றுச் சூழலுக்கு உகந்த முறை என்பதோடு பழைய வழக்கமான முறைக்கு மாற்றாகப் பயன்படுத்தும் போது முன்பை விட பாதி அளவு தண்ணீர பயன்படுத்தினால் போதும் என்று கூறப்படுகிறது .

வழக்கமான முறையில் 1 கிலோ தென்னை நார்களைச் சுத்தப்படுத்த 20 லிட்டருக்கும் மேல் தண்ணீர் தேவைப்படும். அதே, இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் 8 லிட்டர் தண்ணீர் மட்டுமே போதும் என்கிறார் அவர். தென்னை நார்களைப் பதப்படுத்த உதவும் ந்தை இந்தப் புதிய தானியங்கி தொழில் நுட்ப முறைக்கு “பியூர் எனிவ்” எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்ல தென்னை நார் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இனிமேல் நார்களைக் கழுவி, உலர வைப்பதற்கு ஏக்கர் கணக்கில் தென்னை நார்த் தோட்டங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விளைபொருட்களை சேமித்து வெயிலில் உலர்த்துவதற்கு ஒரு சிறிய அளவிலான நிலம் போதும் என சரவணகுமார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் சுமார் 5,000 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன, அவற்றில் 1,750 பொள்ளாச்சியில் உள்ளன.

அங்கு, விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான தென்னந்தோப்புகளை, தென்னை நார் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த தொழிற்சாலைகள், தங்களுடைய சுத்திகரிப்புப் பணிகளுக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துகின்றன. சில சமயங்களில் தென்னை நார்களை ஊற வைக்கும் குழிகளில் அவற்றின் உப்புத்தன்மையைக் குறைப்பதற்காக அவர்கள் பல மடங்கு அளவிலான தண்ணீரை அந்தப் பகுதியிலுள்ள பாசனக்கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் இருந்தும் எடுத்துக் கொள்கின்றன. இப்படிச் செய்வதால் அந்தப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதோடு சுத்திகரிப்பு யார்டுகளாகப் பயன் படுத்தப்படும் தென்னந்தோப்புகளின் மண் மீளமுடியாத அளவுக்கு மலட்டுத்தன்மையை அடைகிறது என பலவேறு ஆய்வுகள் மூலம் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் தேவைக்கு அதிகமாகவே வருமானம் ஈட்டித் தந்த வேலையை விட்டுவிட்டுத் தான் சரவண மூர்த்தி இப்படி ஒரு முய்ற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அங்கு தான் பணிபுரிந்து வந்த வந்த நியூயார்க் வங்கியில் இருந்து வேலையை விட்டு விட்டு வரும் போது சரவண மூர்த்திக்கு கொரோனா குறித்த தீர்க்கதரிசனம் எதுவும் கிடையாது. அவருக்கு மட்டுமல்ல உலகில் யாருக்குமே அப்போது இந்தக் கொடிய பெருந்தொற்று குறித்த ஞானமெல்லாம் இருந்திருக்க வேண்டிய வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு சூழலில் 2011 ஆம் ஆண்டில் அங்கு வேலையை விட்டு விட்டு இந்தியா வந்த சரவண மூர்த்தி இதற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். தென்னை நார் பதப்படுத்தும் தொழிலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் இலங்கைக்கு இதற்காக அவர் பலமுறை விஜயம் செய்திருக்கிறார். அங்கு பெற்ற அடிப்படை தொழில்நுட்ப அறிவை மூலதனமாக வைத்து 2021 ஆம் ஆண்டில் பியூர் எனிவ் இன் முன் மாதிரியை வடிவமைத்திருக்கிறார். அதை எடுத்துச் சென்று இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் உலகநாடுகளின் முன்னணி நிறுவனங்களின் முன்னிலையில் வைத்த போது.. இத்தாலிய நிறுவனம் ஒன்று இதைப் பயன்படுத்தி பொள்ளாச்சியில் தென்னை நார் யூனிட் இன்றை அமைக்க விருப்பம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல; இலங்கையில் உள்ள தென்னை அபிவிருத்தி அதிகார சபையும் சரவணமூர்த்தி யின் புதிய தானியங்கி தொழிநுட்பத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறது.

2021 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து தென்னை நார் யூனிட்களின் வகையையும் 'வெள்ளை'யிலிருந்து 'ஆரஞ்சு' ஆக மாற்றியது, ஆனால் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கான சங்கங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி மீண்டும் பழைய நிலையையே திரும்பப் பெற்றன. ஆனால், இன்றும் கூட கேரளாவில், அவை சிவப்பு வகை தொழில்கள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன. கேரளாவில் தென்னை நார் பதப்படுத்துதல் தொடர்பாக கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியதால், தங்களுக்கு அருகில் இருந்த நகரமான பொள்ளாச்சியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர, தற்போது தென்னை நார் பதப்படுத்தும் யூனிட்களைத் திறந்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com