ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் எலக்ட்ரிக் சாதனங்களின் முக்கியத்துவம் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதை கவனத்தில் கொண்டு, வாகன உற்பத்தி நிறுவனங்களும் இருசக்க வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை அனைத்திலுமே எலக்ட்ரிக் சாதனங்களை சார்ஜ் செய்து கொள்வதற்கான வசதியைக் கொடுத்துவருகின்றன.
இதேபோல, இந்திய ரயில்வே துறையும் பயணிகளுக்கு சிறப்பான ரயில் சேவை அனுபவத்தை வழங்க, எலக்ட்ரிக் சாதனங்களுக்கு சார்ஜ் போட தனி ப்ளக் பாயிண்ட்களை ஒவ்வொரு ரயில் கம்பார்ட்மெண்டிலும் வழங்கியுள்ளது. ரயிலில் பயணம் செய்வதற்கு சௌகரியமான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கவே இந்த வசதியானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனித்துவமான பிளக் பாயிண்ட்களில் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மடிக்கணினிகள், டேப்லட் என எந்த எலக்ட்ரிக் சாதனமாக இருந்தாலும் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இனி இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஒரு அதிரடி நடவடிக்கையை இந்தியன் ரயில்வேஸ் மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, இனி குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரயில்களில் கொடுக்கப்பட்டுள்ள பிளக் பாயிண்ட்டில் சார்ஜ் செய்ய முடியும் என்ற வசதியை இந்தியன் ரயில்வேஸ் அறிமுகம் செய்யவிருக்கிறது. சமீபகாலமாக, சார்ஜிலேயே இருக்கும் செல்போன்கள் வெடிக்கும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்கிறது ரயில்வே துறை.
இதிலும் நம்மில் பலர், வீட்டில் எப்படி இருக்கிறோமோ அதே போலவே இரயில் பயணிக்கும் போதும் இருக்கிறோம். செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு மீண்டும் எடுக்கும் போது ஸ்விட்சை ஆஃப் செய்வதில்லை. அல்லது பல மணி நேரம் எலக்ட்ரிக் சாதனங்களை சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே விட்டு விடுகிறோம். இது முற்றிலும் ஆபத்தான செயலாகும். மேலும் ரயிலில் சிலர் சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுவதால், அவர்களுக்கு மட்டுமல்லாமல் ரயிலில் பயணிக்கும் பிற பயணிகளுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இத்தகைய அபாயகரமான நிகழ்வு எதுவும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்திலேயே, செல்போன் மற்றும் மடிக்கணினிகளை சார்ஜ் செய்யும் விஷயத்தில் நேரக் கட்டுப்பாடு என்ற விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது இந்தியன் ரயில்வே.
இனி ரயிலில் பயணிப்பவர்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே செல்போனை சார்ஜ் செய்ய முடியும். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ரயிலில் இருக்கும் பிளக் பாயிண்ட்களை யாரும் பயன்படுத்த முடியாது. அவற்றுக்கான சப்ளை முற்றிலுமாக தடை செய்யப்படும். இந்த விதியானது இந்திய ரயில்வேயில் புதியதாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன் பயணிகளுக்கு சிறப்பான பயண அனுபவத்தை வழங்க பல்வேறு விதமான புதிய அம்சங்களை இந்திய ரயில்வே துறை வழங்கி வருகிறது. இந்த சூழலில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சார்ஜிங் நேரக் காட்டுப்பாட்டை அமல்படுத்தியது வரவேற்கத்தக்கதுதான்.