தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொத்துப் பட்டியலை வேட்பாளர் மனுவின் மூலம் தேர்தல் ஆணைத்திடம் சமர்ப்பித்தார். அந்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்து மதிப்பு தகவல்கள் உண்மையில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தனது சொத்துக்களை மறைத்துவிட்டார் எனவும் சேலம் நீதிமன்றத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த மனு குறித்த விசாரணை அறிக்கையை மே 26ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிச்சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை இன்று சேலம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்து இருக்கின்றனர்.