‘எடப்பாடியை கூப்பிடுங்க’:
ஓபிஎஸ் - தீபா அரசியல் சந்திப்பு!

‘எடப்பாடியை கூப்பிடுங்க’: ஓபிஎஸ் - தீபா அரசியல் சந்திப்பு!

Published on

ரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு எப்படியோ, ஆனால் அதிமுகவில் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற பலசாலி பிரச்னையை இபிஎஸ்ஸுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் ரொம்பவே அதிகரிக்கச் செய்துள்ளது. அதனால்தான் இந்த இருவரும் தங்கள் அணி சார்பாக வெவ்வேறு வேட்பாளர்களை இந்தத் தொகுதியில் அறிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணி சார்பாக செந்தில் முருகன் என்பவரும், இபிஎஸ் அணி சார்பாக தென்னரசு என்பவரும் வேட்பாளர்களாக களம் காண உள்ளனர். ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரின் உட்கட்சி கௌரவ பிரச்னையால் முடங்கப்போவது என்னவோ எம்.ஜி.ஆர். கண்ட இரட்டை இலை சின்னம் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ‘இந்த சந்திப்பு ஓபிஎஸ்ஸுக்கான ஆதரவா?’ என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, தீபா மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. ஆனால், ‘தீபாவுக்கும் மாதவனுக்கும் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்கு ஓபிஎஸ்ஸை அழைப்பதற்காகத்தான் இந்த சந்திப்பு’ என்று தீபாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றார்கள். ஓபிஎஸ் – தீபா ஆரம்பத்தில் இருந்தே மோதலில் ஈடுபடாமல் உள்ளனர். தர்ம யுத்த காலத்தில் கூட இவர்கள் மோதிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த சந்திப்பு வெறும் அழைப்பிதழோடு மட்டும் முடிந்து போகவில்லை. அதையும் தாண்டி அதில் அரசியல் பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதாவது, தீபா கொடுத்த அழைப்பிதழைப் பெற்றுக்கொண்ட ஓபிஎஸ், ‘பழனிச்சாமியை அழைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டராம். அதற்கு தீபா, ‘ஒருவேளை அவரை அழைத்தால் இவர் விழாவுக்கு வராமல் போய்விடுவாரோ’ என்ற எண்ணத்தில், ‘இல்லை… இதுவரை அவரை அழைக்கவில்லை’ என்று கூறி இருக்கிறார். ஆனால் அதைக்கேட்ட ஓபிஎஸ், ‘அவரையும் அழையுங்கள். தவிர்க்க வேண்டாம்’ என்று தீபாவிடம் கூறினாராம். இதைக் கேட்ட தீபாவுக்கு, ‘இவர் என்னதான் மனதில் நினைக்கிறார் என்றே புரிந்துகொள்ள முடியவில்லையே’ என்று குழம்பிப் போனாராம். ஆனால், நேற்று வரை தீபா எடப்பாடி பழனிச்சாமியை இந்த விழாவுக்கு அழைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com