டெல்லிக்கு டெபுடேஷனில் செல்ல நினைக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்! விடுவிக்கத் தயங்கும் மாநில அரசுகள்!

டெல்லிக்கு டெபுடேஷனில் செல்ல நினைக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்! விடுவிக்கத் தயங்கும் மாநில அரசுகள்!
Published on

தகுதி வாய்ந்த, திறமையான நிறைய ஐ.பி.எஸ் அதிகாரிகளை டெபுடேஷனில் மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருக்கிறது.

ஏன் திடீரென்று இப்படியொரு கடிதம்? மத்திய அரசு பணிகளில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பற்றாக்குறையா? திறமையான அதிகாரிகளை மாநில அரசுகள் டெல்லிக்கு அனுப்ப தயங்குகிறார்களா? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பலாம். ஆனால், மாநில அரசுகளின் மீது உள்துறை அமைச்சகத்திற்கு வருத்தம் இருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

மத்திய அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி, ஒரு மாதத்திற்குள் பணியில் சேர முடியாவிட்டால் அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு பரிசீலிக்கப்பட இயலாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தனிப்பட்ட காரணமோ அல்லது மாநில அரசு விடுவிக்கத் தயங்கினாலோ, எதுவாக இருந்தாலும் ஐந்தாண்டுகள் தடை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறது.

முதலில் அதிகாரிகளை பரிந்துரை செய்துவிட்டு பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்வது; மத்திய அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை மாநிலப் பணியிலிருந்து விடுவிக்க தயங்குவது போன்றவற்றை பல மாநில அரசுகள் மேற்கொண்டு வருவதுதான் உள்துறை அமைச்சகத்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பணிகள் தேக்கமடைவதாகவும், நிர்வாக ரீதியாக சிக்கல்களையும் உண்டாக்குகின்றன.

இன்றைய நிலையில் மத்திய அரசுப் பணிகளில் டெபுடேஷனில் நியமிக்க வேண்டிய இடங்களின் எண்ணிக்கை 220. ஏறக்குறைய 17 மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக சி.பி.ஐ, ஐ.பி, சி.ஏ.பி.எப் போன்ற துறைகளில் உடனடியாக ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருக்கிறது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலமாகத்தான் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மத்திய அரசு பணிகளில் மட்டுமல்ல மாநில கோட்டாவிலும் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 40 சதவீத இடங்கள், சி.டி.ஆர் என்னும் மத்திய அரசின் டெபுடேஷன் பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது அடிப்படை விதியாக பின்பற்றப்படுகிறது. ஆனால், பல மாநிலங்களில் இவை பின்பற்றப்படுவதில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலோடு, மாநில அரசு பரிந்துரை செய்யவேண்டும். சில மாநிலங்களில் போதுமான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியில் இல்லையென்பதால் மாநிலங்கள் தயங்குகின்றன.

அதிகாரிகள் விருப்பம் தெரிவித்தாலும், பல நேரங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசு சம்மதம் தெரிவிப்பதில்லை. சம்பந்தப்பட்டவர்களின் விண்ணப்பத்தை டெல்லிக்கு அனுப்பி வைப்பதும் இல்லை.

ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேரடியாக இணையத்தின் மூலமாக மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசு துறை வாரியாக விண்ணப்பத்தை பரிசீலித்து, முறைப்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மாநில அரசுகள் தன்னிடமுள்ள அதிகாரிகள் சுழற்சி முறையில் மத்திய அரசுப் பணிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகக்கும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பாக அமையும்.

மாநில அரசோடு உரசலை சந்திக்க நேரும் அதிகாரிகள், மத்திய அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு விரும்புகிறார்கள். சில அதிகாரிகளின் விண்ணப்பம் ஏற்கப்படுகிறது. ஆனால், பலர் காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டியிருக்கிறது. மத்திய, மாநில உறவு என்பது நாளுக்கு நாள் சீர்கேடு அடைந்து வருவது என்பது மட்டும் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com