
உலக அரசியல் ஒரு தீப்பொறி பறக்கும் சதுரங்க ஆட்டம். ஒவ்வொரு நாடும் தன் காய்களை அசத்தலாக நகர்த்தி, ராஜ்யக் கொள்கைகளை மையமாக வைத்து ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான்-இஸ்ரேல் மோதலில் நடுநிலை பிடிப்பதாகச் சொல்லி, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இது உண்மையான நடுநிலையா, இல்லை மாஸ்டர் பிளானா?
ரஷ்யாவும் ஈரானும் பல தசாப்தங்களாக கைகோர்த்து நிற்கும் நட்பு நாடுகள். ஆனால், அமெரிக்காவின் “மிட்நைட் ஹேமர்” தாக்குதல், ஈரானின் பொர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் அணு மையங்களைத் தகர்த்தபோது, ரஷ்யா ஏன் பக்கத்தில் நின்று கை கொடுக்கவில்லை? செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பொருளாதார மாநாட்டில் புதின் கூறினார், “இஸ்ரேலில் 20 லட்சம் ரஷ்ய மொழி பேசுபவர்கள் வாழ்கிறார்கள். அது கிட்டத்தட்ட ரஷ்ய மொழிநாடு. இதை நாங்கள் மறக்க மாட்டோம்.” இது மனிதாபிமானமா, இல்லை அரசியல் தந்திரமா?
ஈரானுக்கு ஆதரவு தராதது, ரஷ்யாவின் கூட்டணி உறுதியை கேள்விக்கு உட்படுத்தியது. ஆனால் புதின், “இவை எரிச்சலூட்டும் குற்றச்சாட்டுகள்” என்று பதிலடி கொடுத்தார். “ரஷ்யாவில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அரபு, இஸ்லாமிய நாடுகளுடன் நீண்டகால நட்பு உள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் நாங்கள் பார்வையாளர்கள்,” என்று அவர் கூறினார். ஒரு கையில் ஈரானைப் பிடித்து, மறு கையில் இஸ்ரேலுடன் குலுக்கல் ஒரு இராஜதந்திர நாடகமா?
அமெரிக்கா, 14,000 கிலோ பங்கர்-பஸ்டர் குண்டுகளால் ஈரானின் அணு மையங்களை “முற்றிலும் அழித்துவிட்டதாக” ட்ரம்ப் மார்தட்டினார். பதிலுக்கு, ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகளை ஏவியது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “முதலில் பதிலடி, பிறகு பேச்சு,” என்று கர்ஜித்தார். இந்த மோதல், உலகை ஒரு ஆபத்தான விளிம்புக்கு இழுத்துச் செல்கிறது.
புதின், ஈரான்-இஸ்ரேல் இடையே அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார். ஆனால், ட்ரம்ப், (ரஷியாவின் உள்நாட்டு சிக்கல்களை - உதா: யுக்ரேன் போர், ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பொருளாதார தடைகள்) “முதலில் உன் பிரச்சினைகளைப் பாரு, புதின்!” என்றார்.
இந்த அரசியல் மேடையில், ஒவ்வொரு நாடும் தன் நலனை முன்னிறுத்துகிறது. ரஷ்யா, இஸ்ரேலில் உள்ள தன் மக்களை கருதி, ஈரானுக்கு முழு ஆதரவு தர மறுக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேலை தாங்கி, தன் செல்வாக்கை விரிவாக்குகிறது. ஈரான், தன் இறையாண்மையைக் காக்க பதிலடி தருகிறது. இது ஒரு உலகளாவிய சதுரங்கம் ஒரு தவறான காய் நகர்த்தல், பெரும் மோதலைத் தூண்டலாம்.
புதினின் நடுநிலை, ஒரு கணக்கிடப்பட்ட அரசியல் நகர்வு. இரு தரப்பையும் சமநிலையில் வைத்து, ரஷ்யாவின் நலனை அவர் பாதுகாக்கிறார். இந்த ஆட்டத்தில் வெற்றி யாருக்கு? காலமே பதில் சொல்லும்.