கடந்த திங்கட்கிழமை சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனையடுத்து ஈரான் மக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டுமென்று கூறிவருகின்றனர். ஒருவேளை ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முடிவெடுத்தால் அமெரிக்கா அதில் தலையிடக் கூடாது என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. அந்தவகையில் இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசா மீது கடும் தாக்குகதலை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் சுமார் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலிஸ்தீன மக்கள் பலியாகினர்.
ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஈரானில்தான் செயல்பட்டு வருகின்றனர். இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைத் தாக்க வேண்டுமென்று முடிவெடுத்தது.
சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் பகுதியில் உள்ள ஈரான் தூதரகத்தில் இந்த வாரம் திங்கட்கிழமை இஸ்ரேல் விமானம் குண்டு மழை பொழிந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே 2 புரட்சிப்படை தளபதிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டது ஈரானுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், இதற்கு முன்னர் 2020ம் ஆண்டு ஈரான் படையின் முக்கிய கமண்ட்டரான ஜெனரல் காசிம் சொலைமணி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தார். அதன்பின்னர் தற்போது மீண்டும் படையின் முக்கிய தளபதி கொல்லப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கோபமடைந்த மக்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். அந்தப் போராட்டங்களின் போது ஈரான் இஸ்ரேலைத் தாக்க வேண்டும் என்று மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
திங்கட்கிழமை நடந்த சம்பவத்திற்கு ஈரான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. இதனால் அடுத்த வாரம் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ராணுவ நிலைகளின் மேல் போர் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்கா, “ஈரானின் தாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்றுதான். நாங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவுள்ளோம்.” என்று கூறியுள்ளது.
இதனிடையே ஈரான், “இஸ்ரேல் நாட்டின் மீதான நடவடிக்கைகளில் அமெரிக்கா தலையிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளது. அதற்கு பதிலளித்த அமெரிக்கா, “ எங்கள் நாட்டு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடாது.” என்று கூறியுள்ளது.
இஸ்ரேல் காசா போருக்கே இன்னும் பதிலில்லாமல் இருக்கும் நிலையில், தற்போது ஈரான் இஸ்ரேல் மீது தாக்கதல் நடத்தத் தயாராகி வருவது மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.