நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா?

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா?

தமிழக அரசியலுக்கு நடிகர்கள், நடிகைகள் வருவது ஒன்றும் புதிய விஷயமில்லை. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே பலர் வந்திருக்கிறார்கள். சிலர் நிலைத்திருக்கிறார்கள், சிலர் காணாமல் போயிருக்கிறார்கள், அண்மைக்காலமாக அடிக்கடி இந்த விஷயத்தில் பேசப்படும் பெயர் நடிகர் விஜய்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் “விஜய் அரசியலுக்கு வருகிறார்” என்ற செய்தியை அவர் மறைமுகமாக ரசிகர்களிடம் பரவ விட்டு சலசலப்பை உண்டாக்கினார். அதற்காக சந்திரசேகர், விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாற்றி புதியவர்களை நியமித்து அறிவித்தார். ஆனால் இதை விஜய் கடுமையாக எதிர்க்க அந்த விஷயம் அப்படியே நீர்த்துப்போனது. அதுமட்டுமில்லை, இந்த விஷயத்தால் தந்தை மகன் உறவில் கூட விரிசல் எழுந்தது.

அரசியல் தலைவராகும் ஆசை

இப்போது “விஜய்யின் அரசியல் பிரவேசம்” என்ற செய்தி உயிர்பெற்று உலவ ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு முக்கியக் காரணம், அண்மையில் நடிகர் விஜய் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு. விஜய் தனது ரசிகர்களை மீண்டும் சந்தித்திருக்கிறார். அவர் தன் ரசிகர்களுடன் விவாதித்த விஷயங்கள் இந்த சந்திப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னரே, பல நடிகர்களுக்கு ஏற்பட்ட அரசியல் ஆசை இப்போது நடிகர் விஜய்க்கும் தொற்றிக்கொண்டது. இதை இளைய தளபதியாக இருந்த விஜய், தளபதியாக மாறி தனது படங்களின் மூலமாகவும் மறைமுகமாக வெளிப்படுத்தத் தொடங்கினார். இது 2013-ம் ஆண்டு வெளியான 'தலைவா' படத்தின் மூலம் அரசியல் ஆசையை தீவிரப்படுத்தினார். 'டைம் டு லீட்' என்கிற டேக் லைனுடன் 'தலைவா' பட வெளியீட்டுக்கான அறிவிப்பு வந்தது. இதையடுத்து “அந்தப் படத்தை வெளியிடக் கூடாது” எனத் திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் வந்ததாகச் செய்திகள் வெளியாகின. இப்படிப் படங்கள் வெளியாகும் போது எழுந்த அரசியல் பிரச்னைகளால் முடிவைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். இப்போது அந்த ஆசை மீண்டும் துளிர் விட்டிருக்கிறது.

'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து இடம்பெற்றிருந்த வசனம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து வெளியான 'பிகில்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ''யாரை, எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கே கரெக்டா உட்காரவைத்தீர்கள் என்றால், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்'' என எதிர்மறையாக அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தார். இதற்கு அ.தி.மு.க.-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்வாறு விஜய் அரசியல் பேசுவதும், அதற்கு அரசியல் கட்சிகள் எதிர்வினையாற்றுவதும் வாடிக்கைதான் என்றாலும் தற்போது விஜய் தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்துவருகிறார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கான சிக்னல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளுக்கு இடையே பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் ரசிகர்களை மீண்டும் சந்தித்துப் பேசி, மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். எனவேதான் இது அரசியலுக்கு வருவதற்கான அடுத்த 'மூவ்' என்று கருதப்படுகிறது. இந்த சந்திப்புக்கு முன்னர் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்திருந்தார். இப்படி மாவட்ட வாரியாக அவர் ரசிகர்களை இதற்கு முன் சந்தித்ததில்லை

இந்தக் கூடங்களில் அவர் பேசியது ஒரு அரசியல்வாதியின் பேச்சாக இருந்தததை ஊடகங்கள் கவனித்தன. மாவட்டங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்த்த நிர்வாகிகள் தன்னிடம் தங்கள் எண்ணங்களை நேரடியாக்கச் சொல்ல வேண்டும், மக்கள் நலப் பணிகளைத் தீவிரமாகச் செய்ய வேண்டும், அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அனைத்துப் பகுதிகளிலும் இயக்கத்தை பலப்படுத்த வேண்டும், அதற்குத் தேவையான உதவிகள் செய்து தரப்படும். அனைத்துப் பகுதிகளிலும் இயக்கத்தை பலப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் அரசியல் கட்சித் தலைவர்களின் பாணியில் இருந்தது. அதில் முக்கியமானது , "எந்தப் பிரச்னையிலும் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிக்கக் கூடாது. அடுத்த முதல்வர் என வர்ணித்து போஸ்டர் ஓட்டக் கூடாது என்ற அறிவுரைதான்.

அரசியலில் நுழைந்தால் விஜய் வெற்றி பெறுவாரா?

வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. தமிழக அரசியலில் இனி நடிகர்கள் நுழைந்து வெற்றிபெறுவது என்பது இனி முடியாத காரியம். அ.தி.மு.க. பிளவு, பா.ஜ.க.வின் எழுச்சி, தி.மு.க.வின் செல்வாக்கு போன்ற சூழலில் இன்னொரு அரசியல் கட்சிக்கு இங்கு இடமில்லை. ஆசைக்குக் கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் நிற்கும் அனைத்து இடங்களிலும் தோற்று கட்சியைக் கலைக்கும் நிலைதான் வரும்.

அரசியலுக்கு வந்தால் அவர் யாருடைய வாரிசாக இருப்பார்?

ரஜினி தனது அரசியல் வருகையை ரத்து செய்துவிட்டு சென்றதை விஜய் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டும் . அவ்வளவு பெரிய நடிகரே ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். உடல்நிலையை காரணமாகச் சொன்னாலும், “தமிழக அரசியலில் தான் நினைத்ததுபோல் நடக்காது” என்று அவருக்குத் தோன்றியதுதான் காரணம்.

விஜய்யின் அடுத்தப்படம் “வாரிசு” . ஆனால் அவர் அரசியலில் யாருடைய வாரிசாகவும் உருவாக வாய்ப்பில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com