விவாகரத்து கொண்டாடப்பட வேண்டிய விஷயமா?

விவாகரத்து கொண்டாடப்பட வேண்டிய விஷயமா?

விவாகரத்து என்பதையே ஒரு ஒதுக்கப்பட்ட விஷயமாக பலரும் பார்க்கிறார்கள். சிலர் அந்த பேச்சை எடுத்தாலே முகம் சுளிப்பார்கள். நீண்டகால தொடர்புக்குப் பின் விவகாரத்து பெற ஒரு ஜோடி விரும்பினால் சமூகத்தில் பலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லி மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி வரும். பெண்கள் இந்த பேச்சை எடுத்தாலே அதை ஏதோ அபசகுனமாக கருதுவார்கள். இந்த தடைகளை எல்லாம் தாண்டி அவற்றை முறியடிக்கும் வகையில் ஒரு பெண், தாம் விவாகரத்து பெற்றதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு கொண்டாடியுள்ளார்.

ஆடை வடிவமைப்பாளரான ஷாலினி, திருமண உறவு முறிந்து விவாரத்து பெற்றதை கொண்டாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சிவப்பு வண்ண உடையணிந்த அவர், கையில் “டைவர்ஸ்” என்ற ஆங்கில எழுத்துக்களுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த விடியோவில் அவர் சொல்லும் செய்தி இதுதான். “திருமண வாழ்க்கை சரியில்லை என்றால் விவாகரத்து பெறுவதுதான் சரியானது. அதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். எதற்காகவும் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தீர்மானியுங்கள். எதிர்கால வாழ்க்கைக்காக மாற்றம் தேவைப்பட்டால் அதைச் செய்ய தயங்காதீர்கள். திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதற்கும், தனித்திருப்பதற்கும் அசாத்திய துணிச்சல் வேண்டும். துணிச்சலான பெண்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு படத்தில் அவர் தனது திருமண புகைப்படத்தை கிழித்தெறிவதை பார்க்க முடிகிறது. அதில், “எனக்கு 99 விதமான பிரச்னைகள். ஆனால், எனது கணவருக்கு ஒரு பிரச்னையும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பலரும் அவரது இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். “நீங்கள் மனஉறுதி கொண்ட பெண்மணி” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். நீங்கள் சக்திவாய்ந்த பெண், துணிச்சலான செயலில் ஈடுபடும் உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று மற்றொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

துணிச்சலாக செயல்பட்ட உங்களை பாராட்டுகிறேன். எதிர்வினையாற்றுபவர்களை கண்டுகொள்ளாதீர்கள். ஏனெனில் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகளை சந்தித்தீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று மூன்றாவது நபர் கருத்து பதிவு செய்துள்ளார்.

எனினும் அந்த பெண்ணின் செயலை விமர்சனம் செய்தவர்களும் உண்டு. உங்கள் செயலை விளம்பரப்படுத்தி மற்றவர்களும் இதேபோல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். இது சமூகத்துக்கு நல்லதல்ல. விவாகரத்து தொடர்பாக நீங்கள் வெளியிட்ட புகைப்படங்களை அழித்துவிடுங்கள் என்று ஒருவர் குறிப்பிட்டுளார்.

சமூகத்தில் என்ன நடக்கிறது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். அடிப்படையில் அந்த பெண் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் செயல்களை காப்பியடித்து செயல்பட்டுள்ளாரோ எனத் தெரிகிறது. நமது நாட்டில் திருமணம் என்பது புனிதமாக கருதப்படுகிறது. அதன் நன்மதிப்பை கெடுத்துவிடாதீர்கள் என்று மற்றொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு பெண் தனது விவாரத்தை கொண்டாடும் வகையில் திருமண உடையில் இருந்த தனது புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தியதுடன்,

என்னைப் போல் ஒரு பெண் உங்களுக்கு கிடைக்கமாட்டாள் என்று முன்னாள் கணவருக்கு கூறியிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றொரு பெண் தனது நான்காவது விவாகரத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com