எகிறும் தக்காளி விலை.. ஹோட்டல் உணவு விலை உயரப்போகிறதா?
தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஹோட்டலில் உணவின் விலையும் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் விளைச்சல் குறைவின் காரணமாக காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் சாமானிய மக்கள் காய்கறி வாங்க முடியாமல் குறைந்த விலையில் உள்ள காய்கறிகளை வைத்து சமைத்து வருகின்றனர். இன்றைய நிலவரப்படி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.110 ஆக உள்ளது. அதேபோல் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் எதிரொலியாக ஹோட்டலில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த விலை உயர்வு குறித்து பேசிய ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ரவி சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "மின்சார பயன்பாடு அதிகம் உள்ள நேரங்களுக்கு ஒரு கட்டணமும் பயன்பாடு குறைவாக உள்ள நேரங்களுக்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மளிகைப் பொருட்கள், காய்கறி விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் மொத்த பாரத்தையும் எங்களால் தாங்க முடியாது. அதனால், அரசு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். மின் கட்டணத்தை ஒரே மாதிரியாக வசூலிக்க வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவிட்டால் ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை 5-10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.