ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே சென்னையில் இருந்து நிறைய விமான சேவைகளை நிறுத்திவிட்டது. இப்பொழுது நம் நாட்டின் விமான போக்குவரத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் இண்டிகோ நிறுவனமும் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளைக் காரணம் காட்டி பல்வேறு விமான சேவைகளை கடந்த 1ஆம் தேதி முதல் நிறுத்தி வருகிறது.
இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு படும் அவதிகள் அதிகரித்தன. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு பேச்சு நடத்தி விதிகளை திரும்பப் பெற்றது. இருப்பினும் பெரும்பாலான விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவது இன்றும் தொடர்கிறது.
தாங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தாலும் நிலைமையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் indigo விமான சேவைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் குறைப்பு விமான டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரும் விமான சேவை நிறுவனமாக விளங்கும் இண்டிகோ தமிழகத்தில் தற்போது தனது சேவையை படிப்படியாக நிறுத்தி வருவது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆனால் இண்டிகோ விமான நிறுவனத் தரப்பில் இது தற்காலிகமான சீரமைப்பு மட்டுமே. தமிழகத்திலிருந்து முழுமையான சேவைகள் நிறுத்தப்படும் என்பது தவறான தகவல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி ஒரு விமான ஓட்டியின் வேலை நேரம் குறைந்து இருக்கிறது. அதனால் விமான சேவையும் குறைக்கப்பட்டு இருக்கலாம். புதிய விமான ஓட்டிகள் வேலைக்கு அமர்த்தபட்டவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.